Saturday, September 20, 2014

துருக்கிய கைதிகளை பத்திரமாக விடுவித்தது ISIS





ஈராக்கின் மோசுல் நகரத்தில் இருந்த துருக்கியத் தூதரகத்திலிருந்து ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் வாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 49 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது துருக்கி திரும்பியுள்ளனர்.



துருக்கியின் தென்பகுதி நகரமான சன்லியூர்ஃபாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் 49 பேரும் இப்போது அங்காராவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இவர்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை. இது “விரிவான, ரகசிய நடவடிக்கை” என துருக்கி அதிபர் ரிசிப் தயிப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.



ஜூன் மாதத்தில் ஐஎஸ் வாதிகள் மிக வேகமாக முன்னேறி மோசுல் நகரத்தைக் கைப்பற்றியபோது, இவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.



இந்தப் பிணைக் கைதிகளின் பாதுகாப்பு கருதியே, ஐஎஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை எதிலும் நேரடியாக ஈடுபட துருக்கி மறுத்தது.



தூதரக அதிகாரிகள், சிறப்புப் படை காவலர்கள் என இந்த 49 பேரும் அந்தத் தூதரகத்தில் பணியாற்றியவர்கள். தூதரகப் பணியாளர்களின் சில குழந்தைகளும் இதில் அடக்கம். இவர்களில் 46 பேர் துருக்கியர்கள். 3 பேர் ஈராக்கியர்கள்.



பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டது, “சந்தோஷமான செய்தி” என துருக்கியப் பிரதமர் அஹ்மெத் தவுடோக்லு தெரிவித்துள்ளார்.



"சனிக்கிழமை அதிகாலையில் எங்கள் குடிமக்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை எங்கள் நாட்டிற்கு திருப்பி அழைத்துவந்திருக்கிறோம். அவர்கள் உடல் நலத்துடன் இருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.



தவுடோக்லு சான்லியூர்ஃபாவுக்குச் சென்று, அவர்களைத் தன் விமானத்திலேயே அங்காராவுக்கு அழைத்துவந்தார்.



அவர்கள் எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்ற விவரத்தை பிரதமர் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களை விடுவிக்க பிணைத் தொகை ஏதும் கொடுக்கப்படவில்லை என துருக்கியின் என்டிவி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் எப்படிக் கிடைத்தது என்பதை அவர்கள் வெளியிடவில்லை.



ஜூன் மாதத்தில் மோசுல் நகரத்தில் பிடிக்கப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட துருக்கிய சரக்கு வாகன ஒட்டுநர்கள் ஒரு மாதத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் விடுவிக்கப்பட்டது எப்படி என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.



ஐஎஸ் இயக்கம் ஈராக் மற்றும் சிரிய நாடுகளின் பெரும் பகுதியைப் பிடித்துவைத்துள்ளது. அந்த இயக்கத்தில் 30,000 போராளிகள் வரை இருக்கலாம் என கருதப்படுகிறது.



ஐஎஸ் இயக்கம் மேலும் முன்னேறி வருவதால், சிரியாவில் இருக்கும் குர்துகள் 45,000 பேர் துருக்கியின் தென்மேற்கு எல்லைப் பகுதியைக் கடந்து துருக்கிக்குள் வந்துள்ளனர். இந்தப் பகுதி வெள்ளிக்கிழமையன்று திறக்கப்பட்டது.



முன்னதாக, துருக்கியப் படைகள் அவர்களைத் தடுத்து வந்தன. இதனால், ஆத்திரமடைந்த துருக்கிய குர்துகள் போராட்டத்தில் இறங்கினர்.



2011ஆம் ஆண்டில் சிரிய அதிபர் பஷர் அல் – அஸாதுக்கு எதிராக கலகம் எழுந்ததிலிருந்து 8,47000க்கும் மேற்பட்ட சிரிய அகதிகள் துருக்கிக்குள் வந்துள்ளனர்.


No comments:

Post a Comment