Wednesday, February 19, 2020

சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா

சாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இதனையடுத்து – இப்படியான வர்த்தமானி வெளிவந்தமையே தனக்கு தெரியாதென பொதுநிர்வாக அமைச்சர் கையை விரித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று அமைச்சரவை கூடியது. இதன்போது இந்த விடயத்தை பிரஸ்தாபித்த அமைச்சர் விமல் வீரவன்ச , சாய்ந்தமருது நகரசபை பிரகடனமானது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

அது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய , கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தையும் , சாய்ந்தமருது நகரசபை விடயத்தையும் சேர்த்து தீர்வைக்கண்டு ஒரே வர்த்தமானியில் உள்ளடக்கி வெளியிட்டிருந்தால் இனங்களுக்கிடையில் சர்ச்சை எழுந்திருக்காதென சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனிடம் அமைச்சர்கள் வினவியபோது இப்படியொரு வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது தனக்கே தெரியாதெனவும் அது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாய்ந்தமருது நகரசபை தொடர்பில் ஏற்கனவே வெளிவந்த வர்த்தமானி இரத்துச் செய்யப்படுமென தெரிகிறது.

No comments:

Post a Comment