- M.n. Mohamed -
இன்று 31,03,2020 காலை முஸ்லிம் சகோதரர் ஒருவரின் ஜனாசா எரிக்கப்பட்டது என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன் முதலாவதாக WHO இணையதளத்திற்கு சென்று அதில் கொரோனா நோயினால் மரணித்தவர்களின் இறுதிச்சடங்கு எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்ற வழிகாட்டல்களை பூரணமாக வாசித்தேன்.
அத்துடன் ஒருவர் உயிரிழந்த பின்பு அவரது உடலில் எவ்வளவு நேரம் வைரஸ் இருக்க முடியும் என்பது தொடர்பான சில தேடல்களையும் செய்தேன். உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி மனித உடலில் வைரஸ் இருக்கும் காலம் தொடர்பான ஒரு தெளிவான முடிவுக்கு அவர்கள் இதுவரை வரவில்லை. பொதுவாக உயிரற்ற கலங்களில் வைரஸ்கள் உயிர் வாழ்வது மிகச் சொற்ப நேரமாகும், ஒரு வைரஸ் வளர்வதற்கு கட்டாயம் ஒரு உயிருள்ள கலம் அவசியமாகும்.
Covid19 ஆல் மரணித்த ஒருவரின் உடலை அடக்கம் செய்யும் போதும் பின்வரும் விடயங்களை கையாளுமாறு WHO வேண்டுகிறது.
01. உரிய பாதுகாப்பு முறைகளுடன் உறவினர்களில் சிலர் அந்த உடலை பார்வையிட முடியும்.
02. அந்த இறந்த உடலை முத்தமிடவோ , கையால் தொடவோ அல்லது குளிப்பாட்டவோ முடியாது.
03. ஆறு அடிகளுக்கு மேல் ஆழமுள்ள குழியைத் தோண்டி அந்த உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் இதன்போது மிகத்தெளிவாக சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் நூறு வீதம் பின்பற்றவேண்டும்.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது அந்த குறிப்பிட்ட நபரின் உடலை எரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கான காரணத்தை சுகாதாரத் திணைக்களம் அல்லது அரசு மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டும்.
ஆனால் இதற்கு அப்பால் பேசப்பட வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. கிழக்கு மாகாணம் உட்பட பல எனது நண்பர்களுடன் உரையாடியதிலிருந்து முஸ்லிம் கிராமத்து வாலிபர்கள் நாட்டின் சட்டதிட்டங்களை தூசிக்கு மதிப்பதில்லை என்பது தெளிவாகிறது.
தற்போது உள்ள பரம்பரை ஜம்மிய்யத்துல் உலமாவிற்கோ அல்லது ஊர் பள்ளி நிறுவனங்களுக்கோ கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக நடக்கின்றனர்.மிகச் சுருக்கமாகச் சொன்னால் நான் மேற்சொன்ன நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்து முஸ்லிம் சமூகம் நீங்கிவிட்டது.
Lock down செய்யப்பட்ட சில கிராமங்களில் கூட சற்றும் பொறுப்பில்லாமல் சிலர் நடக்கின்றனர் . தீர்மானம் எடுக்கும் சக்திகளுக்கு மிகத் தெளிவாக தெரியும் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவம் சிதைந்து சின்னாபின்னமாக உள்ளது என்பது.
இந்த சமூக நிறுவனங்களில் தோல்விக்கு மிகப் பிரதான காரணம் அல்குர்ஆன் கூறும் மிகப்பெரிய வழிகாட்டலாகிய இனைந்து செயற்பட வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட்டமையாகும் .
என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!
என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!
அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!
என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!்(சூரா தாஹா)
மேலுள்ள வசனங்களை ஒவ்வொரு முறை ஓதும் போதும் ,பல விடயங்களை புரியச் செய்கிறது.
எமது சமூகத்தில் சிலர் கூட்டாக பேசிவிட்டு தனியாக முடிவெடுக்கின்றனர். இயக்க வெறி பிடித்த குருடர்களாக வாழ பழகிவிட்டோம். முஸ்லீம் கிராமங்களிலும் இப்படித்தான் நடக்கிறது . ஒரு கூட்டத்தில் பலர் ஒன்று சேர்ந்து ஒரு விடயத்தை பேசுவார்கள் முடிவு எடுப்பார்கள். ஆனால் அதிகாரம் பெற்ற ஒரு சிலர் அந்த முடிவுகளை தமக்கு ஏற்றால் போல் மாற்றி விடுவார்கள்.
அரச உயர் பணிகளில் வேலை செய்யும் பல முஸ்லீம் சகோதரர்களுக்கு பேசினோம் அவர்கள் தெளிவாக சொல்கிறார்கள் முஸ்லிம் மக்களின் நடத்தைகளைகள் தலைகுனியச் செய்ய வைத்துள்ளது .
சற்றும் பொறுப்பில்லாமல் நாட்டு சட்டங்களை துச்சமென நினைத்து நடக்கும் ஒரு பொடுபோக்கு சமூகமாக நாம் மாறிவிட்டோம்.
இனியும் குருடர்களாக இருக்க வேண்டாம் , முஸ்லீம் சமூகத்தை வழிநாடாத்துவதில் தோல்வி அடைந்துள்ளோம் என்பதை ஒத்துக் கொள்வோம். இதை எழுதும் நான் உட்பட இந்த நாட்டின் ஒவ்வொரு வளர்ந்த முஸ்லிமும் சமூகத்தின் இந்த நிலைக்கு பொறுப்புச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
போலியான வழக்காறுகளை நீக்குவதற்கு முன்வாருங்கள், இஸ்லாத்திற்கு முரணான சிந்தனைகளை முஸ்லிம் சமூகத்திலிருந்து போக்குவதற்கு முன்வாருங்கள், உங்கள் மனோ இச்சைப்படி வாழாமல் அல்குர்ஆனும் சுன்னாவும் சொல்கின்ற உண்மையான வழிகாட்டல்களை சமூகத்தில் வழி நடத்துங்கள்.
நாங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பொறுபுச் சொல்ல வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
No comments:
Post a Comment