Saturday, April 4, 2020

நம்மீது விரல் நீட்டப்படும் முன், நம்மைநாமே தற்காத்துக் கொள்வோம்..

Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்.

கோவிட் 19 (கொரோனா) நமது நாட்டில் இப்போது மூன்றாம் நிலையை தாண்டிக்(community spread) கொண்டு போகிறதோ, கட்டுக்கடங்காமல் நிலைமை கை மீறிப் போகிறதோ என்ற‌ அச்சம் சுகாதாரத்துறையினரிடையே தற்போது தோன்றத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில், இறுதியாக இந்த நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பலருக்கு அவர்களுடைய நோய்த் தொற்று யாரிடமிருந்து யாருக்கு தொற்றியது என்பதை அறிவதில் சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

கட்டுக்கடங்காத நிலைமை ஏற்படுகின்றபோது நமது நாட்டைப் பொருத்தவரை அந்தப் பழியை ஒரு சமூகத்தின் மீது சாட்டுவது வாடிக்கையானது. இவ்வாறானதொரு நிலைமையில் அற்கான முயற்சிகள் தற்போது மெதுவாக நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் கொரோனா பரவுவது 'தம்பி'களினால் 'நாநா'களினால் தான் என்றதொரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. சோஷியல் மீடியாக்களும் இனவாத ஊடகங்களும் தங்கள் பங்குக்கு எரிகிற இந்த நெருப்பில் எண்ணெயை வார்த்துக் கொண்டிருக்கின்றன.

கொரோனா தொற்று சந்தேகிக்கப்பட்டவர்களை கூட தீண்டத்தகாதவர்கள் போல, குற்றவாளிகள் போல பார்க்கும் நிலை தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. அதையும் விட இந்த நோயினால் இறந்துவிட்டால் எனது உடலை எரித்துத்து விடுவார்களோ என்ற அச்சம் சமூக மட்டத்தில் மேலோங்கியிருக்கிறது. 

கொரோனா நோய் குறித்து பரப்பப்பட்ட தவறான அச்சமும், களங்கமும், சமூகப் புறக்கணிப்பும், பொறுப்பற்ற சில முடிவுகளும் பொதுமக்களை வைத்தியர்களிடம், சுகாதார ஊழியர்களிடம் தங்களது தனிப்பட்ட தகவல்களை, நோய் நிலைமை குறித்த தகவல்களை மறைக்கும் அளவிற்கும், பொய்யாகச் சொல்லும் அளவிற்கும் நிலைமையை மோசமாக்கி இருக்கிறது. அதையும் விட தெரியாத்தனமாக அறியாத்தனமாக அப்பாவியான சிலர்  இவ்வாறான தகவல்களை வெளிப்படுத்தாமல் இருப்பதையும் நாளுக்கு நாள் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இது மிகப் பாரதூரமானது. நிறைய சிக்கல்களை, பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது.

நோயாளியோ அல்லது பொது மகனோ பின்வரும் தகவல்களை தெரிந்தோ தெரியாமலோ மறைப்பதனால் அல்லது போலியான தகவல்களை கொடுப்பதினால் சக நோயாளர்களும், வைத்தியர்களும், சுகாதார ஊழியர்களும் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான சந்தர்ப்பங்கள் பல தற்போது நமது நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன . இதன் மூலம் முழு வோர்டையும், வைத்தியசாலையையும் மூட வேண்டிய நிலை, அதில் வேலை செய்த வைத்தியர்களையும், தாதியர்களையும், சிற்றூழியர்களையும் 14 நாட்கள் கொரன்டெய்ன் பண்ண வேண்டிய, தனிமைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இது நிலைமையை இன்னும் மோசமாக்கும். இப்படி  ஒருவர் செய்கின்ற பிழை அல்லது கவனயீனமான செயல்பாடு முழு சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு போதுமானது. 

ஆகவே பொதுமக்கள் யாராவது ஏதாவது ஒரு காரணத்திற்காக வைத்தியரிடமோ அல்லது வைத்தியசாலைகளுக்கோ செல்லும் போது பின்வரும் தகவல்களை கட்டாயம் மறக்காமல் வைத்தியர்களிடம் எத்தி வைக்கவும். 

நீங்கள் போவது உங்கள் காலில் உள்ள புண்ணுக்கு மருந்து கட்டுவதற்காகவோ அல்லது வயிற்று வலிக்கு மருந்து எடுப்பதற்காகவோ அல்லது குழந்தைப் பேற்றிற்காகவோ இருந்தாலும் பரவாயில்லை பின்வரும் தகவல்களை கட்டாயம் தெரிவிக்கவும். அவை சரியான தகவல்களாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும். 

இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு வைத்தியரையைச் சந்தித்தாலும் பின்வரும் தகவல்களை கட்டாயம் தெரிவிக்கவும். இது நிறைய பிரச்சினைகள் பின்னர் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். 

பின்வரும் பத்து விவரங்களையும் கட்டாயம் உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள்.  

1. பெயர் 
2. முகவரி (தற்போதைய வ‌திவிட‌ முகவரி மற்றும் நிரந்தர முகவரி கட்டாயம்)
3. வயது (பிறந்த திக‌தி) 
4. தொழில் 
5. உங்கள் கைய‌ட‌க்க‌த்தொலைபேசி எண் 
6. நோய் அறிகுறிக‌ளும் அவை இருநத‌ கால‌மும். 
    A இருமல்? உலர் இருமல் அல்லது சளியுட‌னா? தொண்டை நோவு
    B காய்ச்சல்? தேர்மோமீட்டரால் பதிவுசெய்தால் ஆக‌க்கூடிய‌ வாசிப்பு எவ்வளவு? 
    C தலைவலி?
    D வ‌யிற்றுப்போக்கு? 
    E மூச்சு விடுவதில் சிரமம்
    F நெஞ்சு வலி
    G வேறு ஏதேனும்  அறிகுறிக‌ள்?

7. பயண வரலாறு( மிக மிக முக்கியம்)
    A வெளிநாட்டு பயணம் 
    i) கடந்த 2 மாதங்களில்? 
      •ஆம் 
      •இல்லை 
    ii) க‌ட‌வுச்சீட்டு எண்
    iii) நாடு 
    iv) த‌ரிசித்த‌ இடங்கள்?    த‌ரிசித்த‌மைக்கான‌ காரணங்கள். 
   v)  திரும்பி வந்த திக‌தி 
   vi) தனிமைப்படுத்தப்பட்ட (Quarantine)விவரங்கள். 

   B உள்நாட்டு பயணம் (மார்ச் மாதத்தில் இருந்து) 
   i) இடங்கள் 
   ii) மாவட்டங்கள் - நகரம் - முகவரி 
   iii) காரணம்

8. குடும்ப வரலாறு (மிக மிக முக்கியம்)
  A. கொரோனா (கோவிட் -19) என சந்தேகிக்கப்படும் ஒரு நபருடன் ஏதாவ‌து தொடர்பு?
  B. கோவிட் -19  ஊர்ஜித‌ப்ப‌டுடத்த‌ப்ப‌ட்ட‌ (positive for covid-19)  நபருடன் ஏதாவ‌து     தொடர்பு?
  C. குடும்ப உறுப்பினர் எவ‌ரும் வெளிநாட்டிற்கு பயணம் செய்திருந்தார்களா?
      i) எப்போது பயணம் செய்தனர்
     ii) எப்போது திரும்பி வந்தனர்? வந்த திக‌தி 
     iii) தனிமைப்படுத்தப்பட்ட விவரங்கள் 
     iv) அவர் த‌ரிசித்த‌ இடங்கள் 
     v) அவர்  சந்தித்த மக்கள் பற்றிய விவரங்கள்

9. உங்களுக்கு வேறு மருத்துவ பிரச்சினைகள் உள்ளதா? (மிக மிக முக்கியம்)
  a. நீரிழிவு? 
  b. உயர் குருதி அழுத்தம் உண்டா( high blood pressure)? 
  c. இதய நோய்கள் உணடா? 
  d. உட‌ல் உறுப்பு மாற்று சிகிச்சைகள்? Organ Transplant 
  e. புற்றுநோய் சிகிச்சை பெறுபவரா? கீமோதெரபி (chemotherapy)?
  f. ஏதாவ‌து நோய்க்கு நீங்கள் தொடர்ந்து மருந்துகள் / மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்களா போன்றே விவரங்கள்

10. 60 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்களுடன் வாழும் பிள்ளைகளின் விவரம்.

பீதி அடைய வேண்டாம். இந்த தகவல்கள் மூலம் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பது தான் எங்கள் நோக்கம்.

தயவுசெய்து இவை அனைத்தையும் உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். ஒன்றும் விடாமல் சொல்லுங்கள். ஒவ்வொருவரும் இவைகளை, இவைகளுக்கான விடைகளை எழுதி வைத்துக்கொள்வது நல்லது. வைத்தியசாலைக்கு போகின்ற போது அதை வைத்தியரிடம் காண்பிக்க முடியும். 
Dr PM Arshath Ahamed MBBS MD PAED

தனித்திருப்போம். புத்தி சாதுர்யமாக செயற்படுவோம். வெற்றி பெறுவோம். பின்னப்படும் சதி வேலைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்.

பிற் குறிப்பு- இந்த தகவலை இயலுமான அளவு மற்றவர்களுக்கும் எத்திவைக்கவும். 
இது நம் ஒவ்வொருவரினதும் சமூகக் கடமை.

1 comment:

  1. அருமையான பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete