"தெரண" தொலைக்காட்சியில் (15.04.2020) நடந்த "அழுத் பார்லிமேன்துவ" நிகழ்ச்சியின் வீடியோவை பார்க்கக்கிடைத்தது.
விமல் வீரவன்சவின் கட்சியைச் (தேசிய சுதந்திர முன்னணி) சேர்ந்த - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் அதில் கலந்துகொண்டிருந்தார். அவர் வழங்கிய பதில்களை பார்த்து மனமுடைந்து போனேன்.
👉🏿கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதை முஸம்மில் நியாயப்படுத்திக்கொண்டிருந்தார். அவருடைய அந்தக் கருத்துக்களில் தர்க்க நியாயங்கள் இருக்கவில்லை. விஞ்ஞான அடிப்படையும் இருக்கவில்லை. எரித்ததை நியாயப்படுத்தியே ஆவது என்ற இலட்சியத்தோடு வந்து; அதனை செய்து முடிப்பதாகவே தென்பட்டது.
👉🏿போதாக்குறைக்கு, ஈஸ்டர் குண்டுவெடிப்பு காலத்தில்; பள்ளிவாயல்களில் நாய்களோடும் சாப்பாத்துக் கால்களோடும் புகுந்து தேடுதல் நடாத்தியதையும் நியாயப்படுத்தினார். அதனை முஸ்லிம் சமூகம் எதிர்த்ததையும் தவறு என்றும் நிறுவ முனைந்தார். இனவாதிகள் ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்ற "பொரியை" மீண்டும் மெல்ல வாய் நிறைய கொடுத்தார்.
ஜனாஸாக்களை எரிப்பதை நியாயப்படுத்தியதும் - பள்ளிவாயல்களில் நாய்களை பயன்படுத்தி தேடுதல் நடாத்தியதை நியாயப்படுத்தியுமான - முஸ்லிம் பெயர் தாங்கிய இவரின் கருத்துக்களை - இலட்சக்கணக்கான சிங்கள மக்கள் பார்த்திருப்பார்கள்
அவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தவர்கள்; முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் "முரண்பாடான ஒரு சமூகமாக" கருதிக்கொள்வதற்கு - இவர் காரணமாக அமைகிறாரே என்ற கவலை - அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மனசைக் கவ்விக்கொண்டது.
கனத்த மனதோடு இரவு தூக்கத்திற்கு சென்றேன். தூக்கம் தூரமாகி புரண்டு புரண்டு முதுகு வலியெடுத்தது. முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட விடயங்களில் - தக்க நியாயங்களை முன்வைப்பதற்காக - நேர காலம் பார்க்காமல் செயற்படும் / எழுதும் நம் போன்றோரின் - அனைத்து முயற்சிகளும் வீணாக்கப்படுகிறதே என்ற கவலை ஆட்கொண்டிருந்தது. கடைசியில் களைப்பினால்தான் கண் மூடிக்கொண்டது.
முஸம்மில் உதவி செய்யாவிட்டாலும் - இந்த சமூகத்திற்கு உபத்திரம் செய்யாதிருக்கலாம்.
✔️இதனை எப்படி அழைப்பது; துரோகமா? காட்டிக்கொடுப்பா?
✔️இப்படி செய்வதால்; அப்படி என்னதான் கிடைத்து விடப்போகிறது முஸம்மிலுக்கு?
✔️முஸம்மிலுக்கு அந்தளவு என்னதான் குற்றம் செய்தது; இந்த முஸ்லிம் சமூகம்?
இந்த நாட்டில் வாழும் 02 மில்லியனுக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சாபத்தை தவிர - இவருக்கு எதுவுமே கிடைத்துவிடக்கூடாது என மனம் பிரார்த்தனை செய்கிறது.
எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்
- ஏ.எல். தவம் -

No comments:
Post a Comment