Thursday, April 2, 2020

ஒரே நாடு ஒரே நியதி என்ற தொனிப்பொருளின் கீழ், கொரோனாவினால் மரணித்தால் தகனம் செய்யப்படும்

இலங்கையில் வாழும் அனைவருக்கும் ஒரே நாடு ஒரே நியதி என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் -02- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது கொரோனாவினால் உயிரிழப்பவர்களுக்கான இறுதி கிரியைகள் தொடர்பில் சில அரசியல்வாதிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கையில், தனிப்பட்ட ரீதியில் எவரேனும் முரண்பட்டால் அவர்கள் உலக சுகாதார அமைப்பின் சுகாதார பணிப்பாளர்களிடமிருந்து பிறப்பிக்கப்படும் தீர்மானங்களுக்கு இணங்கி செயற்பட வேண்டிய தேவை ஏற்படும்.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சுகாதார பணிப்பாளர்களின் ஆலோசனைக்கு அமைய நியதி அல்லது சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயலாற்ற வேண்டும். அத்துடன், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வு அமைய வேண்டும் என்பதோடு கௌரவமான மரணமும் சம்பவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் சடலத்தினை தகனம் செய்வதே சிறந்ததாக அமையும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. மேலும் நல்லடக்கம் செய்வதாயின் 8 அடிகள் ஆழத்திற்கு குழிதோண்டி புதைக்க வேண்டும் என்பதோடு, புதைப்பதனால் குறித்த வைரஸ் முழுமையாக அழியாது எனவும், நீரூற்று காணப்பட்டால் அதன்வாயிலாக பரவக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையினால் கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்வதே சிறந்த முறையாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

No comments:

Post a Comment