கட்சி அல்லது குறுங்குழுவாதத்தைத் தாண்டி சிந்திக்கக்கூடிய விசாலமான உள்ளமுள்ள தலைவர்களாக இருக்கும் பட்சத்தில், இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான தருணத்தில் தேசியப் பொறுப்பினைத் தனது தம்பியிடம் தனித்துக் கையளிக்காமல், பரந்த/ பன்முகப் பிரதிநிதித்துவம் கொண்ட தேசிய நெருக்கடிநிலைக் கமிட்டி ஒன்றை அமைத்து இருப்பார்கள்.
உதாரணமாக, இத்தருணத்தில் அமைக்கப்படும் அத்தகைய ஒரு கமிட்டி இப்படியானதாக இருக்கலாம்:
பசில், சம்பிக்க, அனுர (அல்லது ஹந்துன்நெத்தி அன்றேல் லால்காந்த - தொழிற்சங்கத் துறை சார்ந்து லால்) விமல், ஜயகொட, சுமந்திரன், ஹக்கீம் (அல்லது பொருத்தமான முஸ்லிம் ஒருவர்), தொண்டமான் (வேறொருவர் தென்படாததால்), ஒரு பெண் (யார் என்று ஊகிக்க முடியவில்லை. யாருமே இல்லாத பட்சத்தில் மட்டும் பவித்ரா).
இந்தக் கமிட்டியிலே மொட்டு கட்சியின் சிந்தனைப் போக்கிலுள்ளோர் மட்டுமல்லாமல், அச்சிந்தனைப் போக்குக்கு வெளியில் உள்ள நபர்களையும் உள்ளடக்கிக் கிளைக் கமிட்டிகளையும் அமைத்துக்கொள்ள முடியும்.
தம்முடைய சிந்தனைப் போக்குக்கும் இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்தரப்பில் நின்ற டாக்டர் அம்பேத்காருக்கு சுதந்திர இந்தியாவின் முதலாவது பாராளுமன்றத்தில் அமைச்சர் பதவியை வழங்கும்போது காந்தி பின்வருமாறு கூறினார்:
"இந்தியாவுக்குத் தான் சுதந்திரம் கிடைத்துள்ளதே தவிர, காங்கிரஸ் கட்சிக்கு அல்ல."
கொரோனாவும் மொட்டுக் கட்சிக்கு மட்டுமோ அரசாங்கத்துக்கு மட்டுமோ வருவதில்லை; முழு நாட்டுக்கும் தான் வரும். நாட்டுக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்கும் தான். அதனால், எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய விதத்தில் சிந்திக்கத் தக்கவர்களாலேயே அதனை எதிர்கொள்ள முடியுமாக இருக்கும்.
"வெளிநாட்டில் இருந்து வந்த கொரோனாவிலிருந்து தேசத்தைக் காப்பாற்றிய வீரன் நான்தான்" என்று தேர்தல் காலத்தில் சொல்லிக்கொள்ளும் எதிர்பார்ப்பை விட, "பல்வேறு இனத்தவர், சமயத்தவர், அரசியல் கட்சியினர் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து உலகளாவிய தொற்று நோயை எதிர்கொண்டோம்" என ஒருங்கிணைந்து கூறத் தக்கதாக இருப்பதுதானே நல்லது? ஏதேனும் ஒரு காரணத்தால் நாங்கள் தோற்றுப் போனோம் என்றால் அல்லது தேசத்தில் பாரிய உயிரிழப்பையும் உடமை இழப்பையும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதையும்கூட ஒருங்கிணைந்து எல்லோருமாகப் பொறுப்பேற்றுக் கொள்வது தானே நல்லது?
ஆனால், இப்படியான பரந்த சிந்தனைப் போக்குடைய தலைவர்களை, அக்குரணையிலிருந்து ஒரு கொரோனா நோயாளி இனம் காணப்பட்டவுடன், "ஹம்பயர்கள்- சோனிகள் கொரோனாவைக் கொண்டு வந்துள்ளார்கள்" என்று நேற்றிலிருந்து எழுதிக் கொண்டிருப்போரால், ஒருபோதும் உருவாக்கிவிட முடியாது.
Abdul Haq Lareena
~பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி~

No comments:
Post a Comment