Tuesday, August 18, 2020

தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? சஜித் தலைமையில் விஷேட கலந்துரையாடல்


(செ.தேன்மொழி)

ஐக்கிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலில் பின்னடைவை சந்தித்ததற்கான காரணம் மற்றும் எதிர்வரும் தேர்தல்களை வெற்றிக் கொள்வது தொடர்பில் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவுச் செய்யப்பட்டுள்ள காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

இந்த விசேட கலந்துரையாடல் தொடர்பில் அவரிடம் வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

கொழுப்பிலுள்ள சங்ரில்லா ஹோட்டலில் இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலந்துரையாடல் மாலை 5 மணிவரை இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஏற்பாடுச் செய்யப்பட்ட இந்த கலந்துரையாடிலில் , கட்சியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது பொதுத் தேர்தலில் எமது தோல்விக்கு காரணமாக அமைந்திருந்த விடயங்கள் மற்றும் பெருந்தொகையானோர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தமை என்ற விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.அதற்கமைய , எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் , எதிர்காலத்தில் எமது கட்சியி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவ்வாறான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் , பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள புதிய உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோர் எமது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவர்களது எண்ணங்களை தெரிவித்ததுடன் , எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பலத்தை உறுதிப்படுத்துவதற்கு எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.



No comments:

Post a Comment