- அஷ்ஷைக் நாகூர் ளரீஃப் -
கெரோனா தொற்றில் மரணிப்பவர்களை அடக்க அனுமதிக்குமாறு மேதகு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமரபுர மற்றும் ராமான்ய நிக்காயவைச் சேர்ந்த மரியாதைமிகு பௌத்த தேரர்களுக்கு உலக முஸ்லிம்கள் சார்பிலான நன்றிக்கடனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுமார் 21000 பௌத்த தேரர்களை அங்கத்துவமாகக் கொண்ட மேற்படி பௌத்த மதகுருக்கள் சங்கங்கள், இலங்கையில் வசிக்கும் சிறுபான்மையினரின் உணர்வுகளை மதித்து, மேற்படி கடிதத்தினை அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிவைத்தமை, உண்மையான அடிப்படை பௌத்த தத்துவத்தின் படி இன்னும் மனிதநேயம் உலகில் வாழ்கின்றது என்பதைத் தெளிவாக உலகத்துக்கு சொல்லிவிட்டது எனலாம்.
உயிர்களிடத்தே அன்புகாட்டு; உயிர்களைக் கொல்லாதே; தவறுசெய்தால் மன்னிப்பு வழங்கு; போன்றன சித்தார்த்தரின் அடிப்படைப் போதனைகளாகும்.
அகிம்சை, கர்மம் என்பன பௌத்த அடிப்படைகளில் உள்ளவையாகும். அகிம்சை என்பது, ஒருவர் தனது உரிமையை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி, அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்கு வன்முறையால். தீங்கு விளைவிக்காமல், அவர் மனதை மாற்றி, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முன்வருவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
இந்த அகிம்சைவழிக்கே இந்த நிக்காயக்கள் முன்வந்துள்ளன; அவர்களுக்கு முஸ்லிம்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.
அத்துடன், கர்மம் என்பதில், பயனை விரும்பும் செயல்கள் அடங்குகின்றன. அவற்றில், மைரமித்திக கர்மம் என்பதும் ஒன்று, அதாவது, செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தல் என்பதாகும்.
அந்த அடிப்படையிலும், ஒரு சமூகம் செய்ய வேண்டிய கடமைகள் அல்லது சடங்குகளைச் செய்வதே இதன் அடிப்படை நோக்கமாகும் என்பதை பௌத்த தர்மம் போதித்துள்ளது. இதன் அடிப்படையில் எமது அடக்கம் செய்யும் உரிமைகளைத் தருவதே, அவர்கள் பௌத்த தர்மத்தை மதிக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாகம். இல்லாத போது, அவர்களே அவர்களது சித்தார்த்தரின் போதனைகளை உதாசீனப்படுத்தியவர்கள் என்ற குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்.
எனவே, சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை மதித்து நடத்தல்; அவர்களது சமய சடங்குகளைச் செய்துகொள்ளவும் நிறைவேற்றவும் துணைசெய்தல் பௌத்த தர்மத்தின் அடிப்படைகளாகும் என்ற அடிப்படையில், மேற்படி தர்மபீடங்கள் முன்வந்துள்ளமை, ஏதோ ஒரு நல்ல சமிக்ஞை என்றே எண்ணத் தோன்றுகின்றது.
யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறும்; அவனது நாட்டமின்றி, காய்ந்த இலைகளும் கூட விழமாட்டாது. இதுவே, எமது அசைக்க முடியாத ஈமான் ஆகும்.

No comments:
Post a Comment