Wednesday, December 30, 2020

வைத்தியத் துறையில் ஆளுமைமிக்க சிரேஷ்ட மருத்துவ அதிகாரி பறூஸா நக்பர்


அரச மருத்துவ சேவையில் திருமதி பறூஸா நக்பர் 1999ஆம் ஆண்டு இணைந்து கொண்டதிலிருந்து 21 வருட காலம் அரும்பணியாற்றி வருகின்றார். இச்சேவையில் பல்வேறுபட்ட பதவி நிலைகளைக் கடந்து, வினைத்திறன்மிக்க வைத்திய அதிகாரியாகவும் நிருவாகியாகவும் திகழ்கின்றார் இவர். தனது அரச சேவையில் இரு தசாப்தங்களை கடந்துள்ள வைத்தியர் திருமதி பறூஸா நக்பர் இப்பிரதேச மக்களின் பாராட்டுக்களை பெற்றவராவார்.

தனக்கு வழங்கப்படும் பொறுப்புகள் மீது மேலதிகமான கவனம் செலுத்தி, தமக்கு வழங்கப்பட்ட கடமைகளில் எவ்வித குறைகளுமின்றி பணியாற்றி வருபவர் அவர். கடமையின் போது ஏற்படும் பிரச்சினைகள், தடங்கல்களை சவாலாக பொறுப்பேற்று மிகவும் சாதுரியமாக அவற்றுக்குத் தீர்வு காண்பவர் அவர்.

இவர் அக்கரைப்பற்றில் பிறந்து, அப்பிரதேசத்திலேயே கல்வி பயின்று, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவத் துறை மாணவியானார். தனது மருத்துவக் கல்வியை முடித்துக் கொண்டதும் முதல் நியமனம் நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் 1999ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தது.

திருமணத்தின் பின்னர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்ற இவர், அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் 2000ஆம் ஆண்டு பொறுப்பு வைத்திய உத்தியோகத்தராக கடமையைப் பொறுப்பேற்று சிறப்புற சேவையாற்றினார்.

2002ஆம் ஆண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய இவர், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்று 9 வருட காலம் கடமையாற்றினார். இதன் பின்னர் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக பொறுப்பேற்று 2வருடங்களும், இறுதியாக அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக 5 வருட காலமும் பணியாற்றினார். இத்துறையில் சிறந்த அனுபவத்தையும் ஆற்றலையும் பெற்று மக்கள் பணியினை சிறப்புற வழங்கியுள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடந்த ஐந்து ஆண்டுகள் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கி வந்திருந்ததுடன் பொது சுகாதார நடவடிக்கைகளிலும் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து, அயராத சேவையின் மூலம் அத்துறைசார் உயரதிகாரிகளினதும் பொதுமக்களினதும் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.


டொ க்டர் பறுஸா நக்பர் எதிர்வரும் 2021 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வருடாந்த இடமாற்ற கட்டளைக்கு அமைவாக நிந்தவூர் பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையேற்கவுள்ளார்.

இவரது சேவைக் காலப் பகுயில் கொரோனா பரவல் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த போது அவற்றை மிகவும் அவதானத்துடன் கையாண்டார். டெங்கு நோய் அபாயம் மற்றும் கொரனா வைரஸ் தொற்று போன்றன இவர் தனது சேவைக் காலப் பகுதியில் முகம் கொடுத்த பாரிய சவால்களாகும்.

கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசமான அக்கரைப்பற்றின் பொதுச்சந்தை தொகுதியில் ஏற்பட்ட கொரோனா கொத்தணியினால் இப்பிரதேசம் முழுவதும் அச்சமான நிலைமை தோன்றியது. கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக, இரவு பகல் பாராது தனது பணிமனை ஊழியர்களையும் அரவணைத்து, அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று அர்ப்பணிப்புடன் சேவையாற்றி தனது ஆளுமையை வெளிக்கொணர்ந்து அதில் வெற்றி கண்டார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட கொவிட்19 தொற்றினால் சுமார் 300 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இப்பிரதேசம் ஒரு மாதம் காலம் வரையில் முடக்கம் செய்யப்பட்டு இருந்தது. அவ்வேளையில் மக்கள் நலன் கருதி கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

5000க்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர், அண்டிஜன் பரிசோதனைகளை செய்து அபாய நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு உழைத்த டொக்டர் திருமதி பறூஸா நக்பர் வைத்தியத் துறையில் ஆளுமை மிக்க சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாவார்.

- ரீ.கே.றஹ்மத்துல்லா

No comments:

Post a Comment