Thursday, February 11, 2021

ஜனாஸா அடக்கத்தை, நிராகரித்தது யார்...? (Exclusive News)


- Anzir -

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் மகிந்த பாராளுமன்றத்தில் (10.02.2021) கூறியிருந்தார்.

அன்றைய தினம் (10.02.2021) பாராளுமன்ற அமர்வு முடிந்து, சபையில் இருந்து வெளியேறிய பிரதமர் மகிந்த, கூறிய விடயங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

"ஜெனீவாவில் எங்களுக்கு 6 அல்லது 7 முஸ்லிம் நாடுகளின் ஆதரவு தேவை. ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக ஜனாதிபதியிடம் கேட்காமலேயே கூறிவிட்டேன். இதனால் மற்றுமொரு பிரச்சினை ஏற்படுமோ எனத் தெரியாது" என பிரதமர் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மகிந்த  இப்படிக் கூறும்போது, அருகில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனும் இருந்துள்ளார். ஆளுங்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தானும் உடனிருந்துள்ளார்.

எனினும் பிரதமர் மகிந்த கூறிய இந்தத் தகவலை, சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மூலமாகவே இத்தகவல் Jaffna Muslim இணையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

Covid தடுப்பு மற்றும் ஆரம்ப வைத்திய சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயை அப்பதவிக்கு ஜனாதிபதியே நியமித்திருந்தார்.

11.02.2021. அன்று பாராளுமன்றத்தில் பிரதமர் இருக்கத்தக்கதாக, "சுகாதார அமைச்சின் தீர்மானங்கள் தனிப்பட்ட ரீதியில் எடுக்கப்படமாட்டாது. தொழில்நுட்பக்குழு ஊடாக அது எடுக்கப்படும். எனவே தொழில்நுட்பக் குழுவே அந்த யோசனையைக் கொண்டுவந்தன. அவர்களின் இணக்கப்பாட்டுடனேயே நாம் எதனையும் செய்ய முடியும்" என அவர் குறிப்பிட்டு  ஜனாஸா அடக்கலாமென பிரதமர் மகிந்த வெளியிட்ட அறிவிப்பை முற்றாக நிராகரித்திருந்தார். 

இதன்போது பிரதமர் மகிந்த பாராளுமன்றத்திற்கு உள்ளே இருந்தபோதும், எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment