Sunday, April 4, 2021

500 வருட வரலாற்றை கொண்ட ஜெயிலானி, பள்ளிவாசலை இழக்க காரணம் என்ன..?


ஜெயிலானி பள்ளியின் இழப்பை பற்றி எமது சமூகத்தில் பேசு பொருளாக இல்லை என்றாலும் , சிங்கள பக்கங்களில் குருகலை ஒரு பேசு பொருளாக இருக்கிறது.

கடந்த போய தினத்தில் பல்லாயிரக்கணக்கான பெளத்த மக்கள் அவ்விடத்தில் ஒன்று கூடினர்.பன்சலை கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. நெத்.எப்.எம் ஊடக அனுசரணை வழங்குகின்றது.அங்கு பெரிய சிரமதான பணி ஒன்று நடக்க இருப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவிக்கிறது.

 சுமார் 500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட பள்ளியை ஒரு சமூகம் என்ற வகையில் இழந்து விட்டோம்.

இங்கு சம்பிரதாய முஸ்லிம்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி கொள்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயம், இனவாதிகளுக்கு முன்னால் அனைவரும் ஒன்று. இனவாத நிகழ்ச்சி நிரல் அனைத்து முஸ்லிம் கட்டிடங்களையும் ஒன்றாக தான் பார்க்கின்றனர்.

எனவே தமக்கு பிடிக்காதவர்களை குறிப்பாக சிர்க் , பித்அத்களை ஆதரிக்காத பெரும்பான்மை முஸ்லிம்களை வஹ்ஹாபிகள் என்றும் , வஹ்ஹாபிசம் என்பது தீவிரவாதம் என்ற கருத்தையும் ஆழமாக பதிவு செய்து விட்டீர்கள்.இனவாத அமைப்புகளுக்கு குறிப்பாக ஞானசார பிக்குவுக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் , ஜமாஅத்கள் , அமைப்புக்கள் , கல்வி நிலையங்கள் , மத்ரசாக்கள் , அரசாங்கத்தில் பணி புரியும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக, அடிப்படைவாதிகளாக கட்டமைப்பு செய்தீர்கள்.

இதன் மூலம் உங்களுடைய அதிகாரத்தையும் , சிர்க் , பித்அத்களை பாதுகாக்கலாம் என்று கனவு கண்டால் அந்த கனவு பிழை என்பதற்கு ஜெயிலானி பள்ளி சாட்சி.

அங்கு  மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள் இடம் பெற்றன என்பது உண்மை.

அவற்றை இல்லாமல் செய்ய வேண்டும் என்று புறப்பட்ட ஜமாத்களும், அமைப்புகளும் தனியே பள்ளிகளை கட்டி வேறாக சென்றார்களே தவிர இத்தகைய சியாரங்கள் , பித்அத்கள் உள்ள இடங்களை அவர்களால் சீர் செய்ய முடியவில்லை. ஏன்..? 

சமூகத்திற்குள் ஏற்பட வேண்டிய சீர் திருத்தத்தை விட்டு சீர்திருத்தம் செய்வதாக சொல்லி பிரிந்து செல்வதால் உண்மையான சீர்திருத்தம் இடம்பெறுவதில்லை. மென் மேலும் சமூகத்தை பிரிப்பதால் சீர் திருத்தம் ஏற்படுமா? சமூகம் பலவீனப்படுமா?

 இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில் அனைத்தையும் விட ஒற்றுமை தான் ஆக முக்கியம் என்பது தான் உண்மை.

அத்துடன் முஸ்லிம்களின் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்யும்  பலமான தலைமைத்துவமும் , முஸ்லிம்களோடு தொடர்பான சர்ச்சைகளுக்கு உட்பட்டுள்ள இடங்கள் பற்றிய தெளிவும் , அத்தகைய இடங்களை பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியும் காலத்தின் தேவையாகும்.

- சப்ராஸ்  சம்சுதீன் -

No comments:

Post a Comment