முன்னதாக, கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, "திருமதி இலங்கை அழகி" ஆக தேர்வு செய்யப்பட்டார்.
எனினும், உலக அழகி போட்டியில் கிரீடத்தை சுவீகரித்த கரோலின் ஜுரி, புஷ்பிகா டி. சில்வா, திருமதி இலங்கை கிரீடத்தை பெற தகுதியற்றவர் என அதேமேடையில் பகிரங்கமாக அறிவித்தார்.
இதையடுத்து, புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட, கரோலின் ஜுரி, இரண்டாவது வெற்றியாளருக்கு அந்த கிரீடத்தை அணிவித்தார். இந்த சம்பவமானது, கடந்த இரு தினங்களாக பேசுப் பொருளாக மாறியுள்ளது.
போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதுடன், அவர் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என அறிவித்தே, புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கரோலின் ஜுரி, கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், கரோலின் ஜுரியின் செயலுக்கு எதிராக, புஷ்பிகா டி சில்வா, கொழும்பு - கறுவாத்தோட்டம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, 2020ம் ஆண்டு திருமதி உலக அழகியாக தெரியாகியுள்ள கரோலின் ஜுரியின் செயற்பாடு, கவலையை அளிப்பதாக உலக திருமதி அழகி போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையொன்றின் ஊடாகவே அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், இலங்கை பிரபலங்கள் இந்த சம்பவம் தொடர்பில் என்ன கூறுகின்றார்கள் என பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க, ஊடகங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
உலக திருமதி அழகுராணியொருவர், மேடையில் செயற்பட்ட விதம் தொடர்பில் தான் கவலை அடைவதாக ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.
உலக நிபந்தனைகளுக்கு அமையவே, செயற்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.
நடுவர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கரோலின் ஜுரிக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என அவர் தெரிவிக்கின்றார்.
அழகு ராணி போட்டிகளில் தான் கண்ட மிகவும் மோசமான சம்பவம் இதுவென உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.
கண்ணீருடன் புஷ்பிகா நடத்திய ஊடக சந்திப்பு
இதற்கிடையே, "திருமதி இலங்கை கிரீடம் புஷ்பிகா டி சில்வாவிற்கு, மீண்டும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய புஷ்பிகா, தனது கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டவர்கள் மீது தனக்கு எந்தவித கோபமும் கிடையாது என தெரிவித்தார்.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மீது வைராக்கியம் வைக்க போவதில்லை எனவும், நீதி என்றாவது ஒரு நாள் வெல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருமணமாகி, விவாகரத்து பெற்ற பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உலகில் உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அவர்களுக்காக தான் குரல் எழுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவாகரத்து பெற்ற பெண்கள், தனியாக சாதனைகளை படைக்கும் இந்த தருணத்தில், அழகி போட்டிகளில் மாத்திரம் ஏன் அவர்கள் பங்களிப்பை வழங்கக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விடயம் தொடர்பில் தான் எதிர்வரும் காலங்களில் செயற்பட்டு, விவாகரத்து பெற்ற பெண்களும் இந்த அழகி போட்டியில் பங்கேற்கும் சூழலை ஏற்படுத்த முயற்சிப்பேன் என்று புஷ்பிகா டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதனூடாக தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெண்ணொருவரை வீழ்த்துவதற்காக, யாராவது ஒருவர் முயற்சிகளை மேற்கொள்வாராயின், அது அவருக்கான வெற்றி கிடையாது எனவும் கூறும் அவர், அதுவே அவரின் தோல்வி எனவும் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கையில் தவறி பல இடங்கள் உள்ளதாகவும், அவ்வாறு தான் வீழ்ந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது பெற்றோரே தனக்கு ஒத்துழைப்பாக இருந்ததாகவும் கூறி, கண்ணீர் விட்டு அழுதார் புஷ்பிகா.
இதேபோல, தனது சகோதரிகள் உள்ளிட்ட அருகிலிருந்த பலரும் தனக்கு துணையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தன்னுடன் யார் இல்லாவிட்டாலும், தனது குழந்தைக்காக தனது வாழ்க்கையை தான் முன்னோக்கி கொண்டு செல்வதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தனது வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் புஷ்பிகா டி சில்வா நம்பிக்கை வெளியிட்டார். BBC
No comments:
Post a Comment