Thursday, April 8, 2021

முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றத்தில் நின்று முழங்கிய சாணாக்கியன் Mp (வீடியோ)


முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றத்தில் நின்று முழங்கிய சாணாக்கியன் Mp, பின்னால் இருந்து அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நசீர் எம்.பி.

சீன ஆக்கிரமிப்பினால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ´இலங்கையர்கள் குறித்து வெளிநாட்டவர் மத்தியில் நல்லதொரு எண்ணப்பாடு உள்ளது. இலங்கையர்கள் இரக்கம் கொண்டவர்கள், நல்லவர்கள் என்ற நல்லதொரு விம்பம் உள்ளது. 

இலங்கையர்கள் வெளிநாட்டவர்களிடம் அன்பாக இருந்தாலும் கூட சக இலங்கையர்களிடம் அவ்வாறு இருப்பதில்லை. 1949 ஆம் ஆண்டில் அப்போதைய மலையக இலங்கையர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே இது வெளிப்பட்டது. 

தமிழர்கள் என்ற பாகுபாடு பார்க்காது நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு இவர்களை கொண்டு முன்னெடுத்து செல்வது என நினைத்துப்பார்க்காது வெளியேற்றினர். பிற்பட்ட காலத்திலும் தமிழர்கள் வெளியேறினர், பறங்கியர்கள் வெளியேறினர். இறுதியாக நாட்டில் எஞ்சியது ஒன்றும் இல்லை. 

வெவ்வேறு காலகட்டத்தில் இந்த அரசியல் இடம்பெற்றது, தேசிய ரீதியில் தமிழர்கள் கல்வி கற்க முடியாத, விவசாயம், ஏனைய வியாபாரங்களில் ஈடுபட முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி இன்று வெவேறு நாடுகளில் நல்ல நிலைமையில் உள்ளனர். 

முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டது. அவர்கள் சிறந்த வியாபாரிகள், அவர்களை வைத்து நாட்டின் வியாபாரத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்து ஆராயாமல், அவர்களை மோசமாக விமர்சித்து அவர்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தை தூண்டிவிடப்பட்டது. 

தமிழர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட அதே அசாதாரண செயற்பாடுகளே முஸ்லிம் சமூகத்திற்கும் ஏற்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக நெருக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டும், அவர்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்ற காரணத்தினால் தான் ஈஸ்டர் தாக்குதலும் ஏற்பட்டது. 

ஆனால் ஒன்றினை ஏற்றுக்கொள்ள வேண்டும், அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கம் இரண்டு வாரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து நிலைமைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 

தப்பித்தவறியேனும் இன்றைய அரசாங்கமே அப்போதும் ஆட்சியில் இருந்திருந்தால் இதை வைத்தே அரசியல் செய்திருப்பார்கள். இன்றும் அதனையே செய்து வருகின்றனர். 

அதேபோல் இந்த நாட்டில் தமிழர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் வேளையில் சிங்களவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் சிங்கள மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுக்கின்றேன், எதிர்காலத்தில் நாட்டில் உருவாகும் நெருக்கடி நிலைமையில் சிங்கள மக்கள் மத்தியில் புரட்சி ஒன்று உருவாகுமானால் அப்போது என்னாகும் என்பதை சிந்தித்துப்பாருங்கள். 

இப்போது சீனாவின் ஆக்கிரமிப்பு, அவர்களின் வர்த்தக ஆக்கிரமிப்பு காரணமாக எதிர்காலத்தில் நிச்சயமாக நாட்டில் பாதிக்கப்பட்ட சிங்கள சமூகமொன்று உருவாக்கும், அப்போது மீண்டும் நாட்டில் கிளர்ச்சி ஒன்று உருவாகும். இலங்கைக்குள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக முரண்பாடுகளை ஏற்படுத்தி அரசியல் செய்யும் கலாசாரத்தை கைவிட வேண்டும். 

இன்று நாட்டின் நிலைமையில் அடுத்து ஏதேனும் ஒரு சமூகத்தை தாக்கி அரசியல் செய்ய ஏதேனும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற பயனும் எமக்கு உள்ளது. 

குறுகிய காலத்தில் பலவீனமான ஆட்சியே இன்று உருவாகியுள்ளது, எனவே அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள சமூகத்திற்கு எதிரான தாக்குதலை நடத்த திட்டம் தீட்டவும் இவர்கள் அஞ்சப்போவதில்லை. 

இன்று தமிழ் மக்கள் தமது உறவுகளை தேடி அலைவதை போலவே இன்னும் பத்து ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகமும் ஈஸ்டர் தாக்குதலுக்கான நியாயத்தை தேடி அலைய வேண்டிய நிலைமை உருவாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment