- YLS Hameed -
ஜனாசா எரிப்புக் காலத்தில் பல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்காக பலமாக குரல்கொடுத்தார்கள். இவர்களுள் திரு சாணக்கியன் முதன்மையானவர். இதன் காரணமாக முஸ்லிம்கள் சாணக்கியனைப் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் எழுதினார்கள்; பேசினார்கள்.
இதற்குக் காரணம் அவர்கள் வெறுமனே பேசியதல்ல. தாங்கள் வாக்களித்துத் தெரிவுசெய்தவர்கள் சோரம்போய் மௌனிகளான நிலையில் இவர்கள்மீது முஸ்லிம் சமூகம் பாரிய வெறுப்பினைக் கொண்டிருந்தது.
எனவே, அச்சூழலில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுத்ததும் நன்றி உணர்வு ஒரு பக்கமும் இவர்கள் மீது கொண்ட வெறுப்பு மறுபக்கமுமாக இணைந்தே தமிழ் உறுப்பினர்களுக்கான பாராட்டாகவும் நன்றி நவிலலாகவும் வெளிப்பட்டது.
மக்கள் தேர்தல் சமயத்தில் சிந்திக்கமாட்டார்கள். தேர்தல் முடிந்ததும் தன் கையறுநிலைக்காக கதறுவார்கள். இது அவர்களது தலைவிதி. அதேநேரம் தாம் சோரம்போயிருந்த நிலையில் தமிழ் உறுப்பினர்கள் நமக்காக குரல் கொடுத்ததையும் நம்மவர்கள் அவர்களைப் பாராட்டியதையும் நமது வாக்குகளைப் பெற்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
எனவே, தங்கள் ஆதரவாளர்கள்மூலம் அப்பொழுதே இத்தமிழ் உறுப்பினர்களுக்கெதிரான விமர்சனத்தைத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் கடந்தகால செயற்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கினார்கள். அவர்களின் எண்ணங்களை சந்தேகச் சந்தையில் விலைபேசினார்கள்.
“சொல்பவனைப் பாராதே; சொல்லைப்பார்.” என்கின்றது; மார்க்கம். தாங்கள் வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டது; குற்றமில்லை. ஆனால் நாங்களும் பேசமாம்டோம்; நீங்களும் பேசக்கூடாது. நீங்கள் பேசினால் எங்கள் செல்வாக்கை அது மேலும் பாதித்துவிடும். எங்களுக்கு சமூகத்தைப்பற்றிக் கவலையில்லை; எங்களைப்பற்றியே கவலை; என்பதாக அவர்களது நிலைப்பாடு இருந்தது.
முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்த தமிழ் உறுப்பினர்களுள் சாணக்கியன் முதன்மையானவர் என்பதனால் அவரே இவர்களது பிரதான இலக்காக மாறினார். இந்நிலையில் வட கிணக்கை இணைத்து தேர்தல் நடாத்தினால் தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடத்தயார்; என திரு சாணக்கியன் அறிவித்தார்.
கிடைத்தது துரும்பு; விட்டுவிடக்கூடாது; என்று சாணக்கியனுக்கு எதிராக புதிய விமர்சனக் கணைகள் பாய ஆரம்பித்தன. நாம் வட கிழக்கு இணைப்புக்கு உடன்படமாட்டோம்; என்பது வேறுவிடயம். வட கிழக்கு இணைப்பு என்பது அவர்களது தொடர்ச்சியான நிலைப்பாடு. தான் முஸ்லிம்களுக்காக பேசியதற்காக அவர்கள் அந்த நிலைப்பாட்டைக் கைவிடவேண்டுமென நாம் எதிர்பார்க்க முடியுமா? தான் முஸ்லிம் கட்சியொன்றில் போட்டியிடப் போவதாக அவர் கூறினாரா? அதனை நாம் விமர்சிக்க என்ன இருக்கிறது? ஆனாலும் விமர்சித்தார்கள்.
இந்நிலையில் கல்முனை உப பிரதேச செயலக விடயத்தில் திரு சாணக்கியன் அக்கறை காட்டினார். இதை அடுத்த துரும்பாக இவர்கள் கையிலெடுத்தார்கள். சாணக்கியனுக்கெதிராக அடுத்த சுற்று விமர்சனம் ஆரம்பித்தது.
கல்முனை உப பிரதேச செயலக விடயத்தில் சகல தமிழ் உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். அதற்கு நமது பலகீனமும் ஒரு காரணம். இன்றுவரை, கல்முனையைக் கூறுபோடாமல் கல்முனையை விட்டுவிட்டு பிரதேச செயலகத்தை பெற்றுக்கொள்ளுங்கள்; என எங்காவது பேசியிருக்கிறார்களா?
கடந்த ஒரு சில தினங்களுக்குமுதல் பாராளுமன்றில் RDHS மற்றும் அஷ்ரப் வைத்தியசாலை தொடர்பாக ஒரு சறுக்கலான உரையை திரு சாணக்கியன் ஆற்றியிருந்தார். அதக்குப் பாராளுமன்றில் பதிலளித்ததாக முகநூலில் பெருமைப்பட்ட நம்மவர்களின் உரையில் இந்த விடயங்களுக்கு பதில் இருந்ததா? ஆகக்குறைந்தது ‘கல்முனையை விட்டுவிட்டு செயலகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றாவது அந்த உரையில் கூறப்பட்டதா?
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம்குறைத்து உப பிரதேச செயலகமா ஆக்கியதாக சாணக்கியன் உட்பட பல தமிழ் உறுப்பினர்கள் பாராளுமன்றில் குறிப்பிட்டார்கள். இன்றுவரை தமிழர்களின் போராட்டமே கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்பதுதான்.
தரமுயர்த்த வேண்டுமென்றால் அதன்பொருளென்ன? தற்போது அது பிரதேச செயலகமல்ல; என்பதுதானே. பிரதேச செயலகமில்லை; என்றால் அதன்பொருளென்ன? அது ஒரு உப பிரதேச செயலகம் என்பதுதானே! இரண்டிற்கும் இடையில் ஒன்று இருக்கின்றதா? இல்லையே!
அவ்வாறெனில் “தரம் குறைத்ததாக தமிழ் உறுப்பினர்கள் எவ்வாறு பேசமுடியும்? அவ்வாறாயின் அது செயலக தரத்தில் இதுவரை இருந்ததா? அவ்வாறு இருந்திருந்திருந்தால் இது வரை அவர்கள் போராடியது; எதைத் தரமுயர்த்துவதற்காக? என்ற கேள்வியையாவது பாராளுமன்றில் எழுப்பமுடிந்ததா?
எதையெதையோ பேசிவிட்டு, தனிப்பட்ட வசைபாடல்களையும் பாடிவிட்டுவந்து ஏதோ பதில்கொடுத்ததாக முகநூல்களிலும் பெரும் பீடிகை போட்டுவிட்டு தமது ஆதரவாளர்களைக்கொண்டு சாணக்கியனை வைதுகொண்டிருப்பதன் பொருளென்ன?
சாணக்கியனை வைவதன்மூலம் தம்மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை சாணக்கியன்மீது திருப்பலாம்; என்பதா?
அவர்களிடம் சிற்றினவாதம் இருக்கிறது; என்பது மறுக்கமுடியாத உண்மை. அது தொடர்பாக பல ஆக்களில் நான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அதில் ஒன்றுதான் கல்முனை விவகாரமும். அதேநேரம் நாம் உடன்பாடில்லாதபோதும் வட கிழக்கை இணைக்க வேண்டுமென்பது அவர்களுடைய கொள்கை.
அவை தொடர்பாக பொதுவாகப் பேசலாம்; அதில் தவறில்லை. ஆனால் முஸ்லிம்களுக்காக சாணக்கியன் பேசினார்; என்பதற்காக அவரை இலக்கு வைத்து நாம் முன்னெடுக்கும் எல்லைதாண்டிய பிரச்சாரம் ஆரோக்கியமானதல்ல. இழந்துவிட்ட தம் ஆதரவை சாணக்கியன் நமக்காக பேசினார் என்பதற்காக அவருக்கெதிராக தனிப்பட்ட முறையில் வசைபாடி தமது செல்வாக்கை சரிக்கட்ட முயல்முவது ஆரோக்கியமற்றது.
மட்டுமல்ல, இன்று தோற்றம் பெற்றிருக்கின்ற இன்னுமொரு கலாச்சாரம் சில அரசியல்வாதிகள் தொலைக்காட்சி விவாவதத்திற்கு சென்று எதிராளியிடம் நன்கு வாங்கிக்கட்டுவது; அல்லது நிகழ்ச்சி நடத்துபவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் முழிப்பது; அல்லது பாராளுமன்றில் தமக்கெதிரான விமர்சனங்களுக்கு பதில் சொல்லமுடியாமல் சொதப்புவது;
அதன்பின் ஆதரவாளர்கள் முகநூலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பதில் சொல்வது; அவர்களை விமர்சிப்பது. ஆதரவாளர்கள் பதில் சொல்வதென்றால் ஒன்றில் தேர்தலில் அவர்களை நிறுத்தி வெல்லவைத்திருக்கவேண்டும் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அந்த ஆதரவாளர்களை அனுப்பியிருக்க வேண்டும். இவ்வாறு ஏனைய சமூக அரசியல்வாதிகள் செய்கிறார்களா?
உரிய இடத்தில் பதில் சொல்லத்தெரியாமல் தத்தளிப்பது; ஆதன்பின் ஆதரவாளர்களுக்குப் பின்னால் மறைவது. இயலாத நமக்கு ஏன் இந்தவேலை?
எனவே, முஸ்லிம்கள் தொடர்பான தமிழ்த்தரப்பின் பிழையான நிலைப்பாட்டை நாகரீகமான முறையில் சுட்டிக்காட்டுங்கள். அதைத்தான் நாங்களும் செய்திருக்கின்றோம். அதைவிடுத்து ஆதரவாளர்களை வைத்து ஆரோக்கியமற்றமுறையில் முகநூலைப் பாவிக்கமுற்படாதீர்கள். அவர்களும் அவர்களின் ஆதரவாளர்கள்மூலம் உங்களுக்கு பதிலளிக்கமுற்பட்டால் அது இரு சமூகங்களுக்கும் நன்றாக இருக்காது; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இப்தார் விமர்சனம்
மறுபுறம் பிரதமருடனான இப்தார் மிக அநாகரீகமாக விமர்சிக்கப்படுகிறது. இவர்கள் பிரதமரை என்ன நோக்கத்திற்காக சந்தித்தார்கள்? என்பது தெரியாது. ஆனால் அது திடீரென இவர்களுக்காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு, என்பது சற்று சிந்தனையைக் கூர்மையாக்கினால் புரியும். ஏனெனில், அது பொதுவாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இப்தாராக இருந்தால் அங்கு ஏனைய ஆளுங்கட்சி முஸ்லிம் எம் பிக்கள் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய முஸ்லிம் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருப்பார்கள்; என்பது ஓர் அரசியல் கத்துக்குட்டிக்கும் புரியும். ( ஊடக அறிக்கைகள் எவ்வாறாவது இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால் நாம் பகுத்தறிவுள்ள ஜீவன்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்)
இங்கு இந்த கையுயர்த்தியவர்கள் மாத்திரமே கலந்துகொள்கிறார்கள்; எனும்போது இது இவர்களுக்காக மட்டும் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது; என்பது தெளிவாகப் புரிகிறது. நோன்பாளிகளுக்கு இவ்வாறு ஏற்பாடு செய்வதன்பது மனிதப்பண்பு.
எனவே, புனிதமான இப்தாரை வைத்து இன்னுமொரு கூட்டம் கர்ணகடூரமான ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதும் ஆரோக்கியமானதுமல்ல; நியாயமானதுமல்ல.
எனவே, விமர்சனங்கள் நியாயமானதாக இருக்கட்டும்.

No comments:
Post a Comment