“அல்ஃபால்பா” எனப்படும் இந்த வகை புல், இலங்கையில் பயிரிடப்பட்டு சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
குறித்த சீன நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்பொருட்டு முதலில் இந்த புல் விதைகளை பரிசோதனைக்காக தேசிய தாவர பரிசோதனை சபைக்கு அனுப்ப வேண்டும் என விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புல் வகை ஆக்கிரமிப்பு தாவர இனமா என்பதையும், அந்த விதைகள் நாட்டின் சுற்றுச்சூழலுடன் இணக்கமாக உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்று சீன நிறுவனத்தின் தூதுக்குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனையின் பின்னர் இலங்கையில் புல் இனங்கள் பயிரிடப்படுமா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது இந்த அல்ஃப்ல்ஃபா புல் விளைச்சல் செய்யப்படவில்லை. குறித்த புல் வகைகளின் விதைகளை சீன நிறுவனம் சப்ளை செய்து, விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதைகளை விதைத்த பிறகு, சீன நிறுவனம் புல் அறுவடையை கொள்வனவு செய்ய உள்ளது.
புல் இனங்களைப் பயன்படுத்தி கால்நடை தீவனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை இலங்கையில் நிறுவுவது குறித்தும் சீன நிறுவனம் கலந்துரையாடியுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த புல் திட்டத்திற்கு மேலதிகமாக இலங்கை நிலங்களில் சீனாவிற்கு தேவையான மிளகாய், மரவள்ளிக்கிழங்கு மற்றும் சில பயிர்களை பயிரிடுவது தொடர்பாகவும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளனர்.
No comments:
Post a Comment