Saturday, August 12, 2023

அப்போ, நீங்கள் வர மாட்டீர்களா..?


- Inamullah Masihudeen -


2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோலன் என்ற பெயரையுடைய சிறுவனுக்கு அரியவகை தசைநார் புற்றுநோய் கண்டறியப்படுகிறது!


மகனுக்கு அருகிலேயே இருந்து அவனை பரிவோடு தாய் முழுநேரமாக கவனித்து வருகிறார்!


அவன் விரும்பும் கதைகள் பேசி, பாடல்கள் பாடி நோயை மறக்கச் செய்து அவனது மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க தன்னாலானவற்றை எல்லாம் செய்கிறார்!


2016 பெப்ரவரி மாதம் நோய் தீவிரமடைந்து வைத்தியர்கள் நம்பிக்கை இழக்கும் நிலை வருகிறது!


தாயும் தன்னை சுதாரித்துக் கொண்டு வழமைபோல் மகனுடன் நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்..


தாய் குளியலறை சென்று வரும்வரை மகன் அதன் வாயலுக்கருகில் உள்ள தரை விரிப்பில் படுத்துக் கொண்டு தாய்க்காக காத்திருப்பான்..


மகனுக்கு ஒருநாள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது, தங்கமே உங்களுக்கு மூச்சு விட சிரமமாக இருக்கிறதா? எனக் கேட்கிறார்..


ஆம் என தலையசைத்த மகனிடம், தங்கமே, இனி உங்கள் நோய் பூரணமாக குணமடையப் போகிறது தைரியமாக இருங்கள்..


நான் உங்களை சுவர்க்கலோகம் அனுப்பி வைக்கப் போகிறேன், அங்கு நீங்கள் பூரணமாக குணமடைந்து மகிழ்ச்சியாக ஆடிப் பாடி விளையாடிக் கொண்டிருப்பீர்கள்.. என்றார்..


அப்போ நீங்கள் வர மாட்டீர்களா?  என்று மகன் கேட்ட போது தனது மனதை கல்லாக்கிக் கொண்டு துயரத்தை வெளிக்காட்டாது நீங்கள் போய் எனக்காக காத்திருங்கள் நானும் விரைவில் வந்து விடுவேன் எனக் கூறுகிறார்..


சுவர்க்கம் பற்றி கூறுகிறார், ஆராதனைகள் பாடுகிறார்... மகனுக்கு விருப்பமான பாடல்களை பாடுகிறார்...


கண்ணை மூடிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்த மகன் கண்ணை திறந்து மகிழ்ச்சியோடு...


அம்மா நான் சுவர்க்கம் செல்கிறேன் உங்களுக்காக அங்கு விளையாடிக் கொண்டு காத்திருப்பேன் என்று கூறிவிட்டு கண்களை மீண்டும் மூடிக் கொள்கிறான்!


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!


இதை பதிவிட்ட தாய் கீழேயுள்ள படத்தை பகிர்ந்து :


"நான் ஒவ்வொரு முறை குளியலறை செல்லும் பொழுதும் மகன் இந்த தரைவிரிப்பில் எனக்காக காத்திருப்பான்.. இப்போதெல்லாம் எனக்கு குளியலறை செல்லவும் பயமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்..!


நன்றி: முஹம்மத் ஹாஜியார் (சிங்கள மொழியில் தந்திருக்கிறார்)


பைஃட் கன்ஸர் டீம்


தமிழில் சுருக்கமாக: 


மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்


யா அல்லாஹ், 


கருணையுள்ள ரஹ்மானே நோயினால் வாடும் உன் அடியார்களுக்கு பூரண ஷிபாஃவை வழங்குவாயாக!


அவர்களை அன்போடு அரவணைத்து பார்த்துக் கொள்வோர் மீதுன் ஈருலகப் பேறுகளையும் நிறைவாகத் தருவாயாக!


சிறுவர்களாக எம்மைப் பரிவோடும் பாசத்தோடும் பார்த்துக் கொண்டது போல் எம் தாய் தந்தையர் மீதும் நீ நிறைவாக அருள் புரிவாயாக !


யா அல்லாஹ், 


வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து வாழ்ந்து சுவனலோகம் செல்லும் நல்லடியார்களாக  ஹுஸ்னுல் காதிமாவுடன் உலகை விட்டுப் பிரியும் உன்னத நிலையை உன்னிடம் கேட்கிறோம்!

1 comment:

  1. மதம் எதுவாகவோ இருக்கட்டும், இம்மாதிரியான துயர நிகழ்வுகள் நெஞ்சம் பதற வைப்பவை.

    இந்த மலரவிருந்த மொட்டுக்காக என் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete