-சட்டத்தரணி பஸ்லின் வாஹித்-
இலங்கையில் அமுலிலுள்ள சட்டங்களின் படிஒரு சிலவிடயங்களில் முஸ்லிம்களுக்கென தனியான சட்டங்கள் உள்ளன.அதில் முக்கியமான ஒரு பகுதி வக்பு சட்டமாகும். அதனை முஸ்லிம் பள்ளிவாயல்களினதும் நம்பிக்கை பொறுப்புச் சட்டம் (1956 ஆண்டு இல.51) எனவும் கூறலாம். ஏறத்தாழ 60 வருடங்கள் பழமையான இந்தச் சட்டமே இலங்கையில் பள்ளிவாயல்களின் பரிபாலனத்திற்கும் அவற்றின் நம்பிக்கையாளர்கள் நியமனத்திற்கும் அதிகாரங்களையும் நியமனங்களையும் வழங்கும் சட்டமாகும். இந்தச் சட்டம் முஸ்லிம் பள்ளிவாயல்களினதும் மற்றும் புனித ஸ்தலங்களினதும் பதிவு செய்தல் சம்பந்தமாகவும் அவற்றின் நம்பிக்கை பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது தொடர்பாகவும் நம்பிக்கை பொறுப்பாளர்களின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவாக்கப்பட்டு உள்ளது.அது மட்டுமல்லாமல் இதன் கீழ் ஏனைய வக்பு சொத்துக்கள் ,அறக்கட்டளைகள் சம்பந்தமாகவும் கூறப்பட்டு உள்ளது.1982 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களை தவிர பாரிய மாற்றங்கள் எதுவும் இதில் கொண்டு வரப்படவில்லை.
சட்டம் சம்பந்தமாக அனைவரும் அறிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான விடயம் எவரும் ஏதேனுமொரு விடயத்தில் தவறு இழைத்து விட்டு தனக்கு சட்டத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருப்பது தெரியாது என்று தப்பிக்க முடியாது என்பதாகும்.எல்லோருக்கும் எல்லா சட்டங்களையும் தெரிந்திருக்க வேண்டுமென்பது முடியாத காரியம் என்றாலும் ஒவ்வொருவரும் தான் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளிலுள்ள சட்ட விடயங்களையாவது அறிந்திருப்பது அவசியம்.அதனடிப்படையில் வக்பு சட்டத்தின் கீழ்வரும் பள்ளிவாயல்களின் நம்பிக்கை பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் இச்சட்டம் சம்பந்தமான தெளிவாக அறிந்திருப்பது மிக மிக முக்கியமாகும்.ஆனால் எத்தனை நம்பிக்கை பொறுப்பாளர்களுக்கு தமது கடமைகள் ,பொறுப்புக்கள் சம்பந்தமான அறிவு இருக்கின்றது என்று கேட்டால் 90% அதிகமானவர்கள் தெரியாது என்றே கூறுவர்.அதை விடுவோம் .எத்தனை பள்ளிவாயல்களில் இச்சட்டத்தின் பிரதிகள் இருக்கின்றன அல்லது எத்தனை நிருவாக சபையினர் இச்சட்டத்திற்கு அமைவாக செயல் படுகின்றனர் என்று கேட்டாலும் 90% அதிகம் எதிர்மறையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இஸ்லாம் பொதுச் சொத்துக்கள் விடயமாக தெளிவான அறிவூட்டல்களை வழங்கி உள்ளது.அது ஒரு புறமிருக்க வக்பு சட்டத்தில் பிரிவு 18 பள்ளிவாயல்களின் வருமானத்தை எவ்வாறு நம்பிக்கை பொறுப்பாளர்கள் பயன்படுத்தலாம் என்பதை கூறுகின்றது மட்டுமல்லாமல் என்னென்ன தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதையும் தெளிவாக்குகின்றது.பள்ளிவாயல்களின் வருமானத்தை வக்பு சபையின் முன் அனுமதி பெற்றே செலவு செய்ய முடியும் என்பது இப்பிரிவின் முக்கிய அம்சம்.ஆனால் சட்டத்திற்கு இணங்க செயல்படும் எத்தனை நிருவாக சபையினர் நாட்டில் உள்ளன?வக்பு சபை உரிய அறிவுறுத்தல்களை இந்த விடயத்தில் நிருவாகசபையினருக்கு வழங்குகின்றதா ?
நாட்டில் எங்கு பார்த்தாலும் பள்ளிவாயல்கள் கட்டப்படுகின்றன.புதிய பள்ளிவாயல்கள் கட்டப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.அதுபோல் தமது தேவைக்கு ஏற்ப இட நெருக்கடியை தவிர்க்க இருக்கின்ற கட்டடம் புனர் நிர்மாணம் செய்வதையும் காலத்தின் தேவை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.ஆனால் கவலைக்குரிய அம்சம் என்னவெனில் இருக்கின்ற உறுதியான கட்டடத்தை உடைத்து தேவைக்கு அதிகமான அளவிலானதாக கட்டப்படுவதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அங்கத்தினர்களுமே.இந்த விடயத்தில் வக்பு சபை தனது கடமையை சரியாக புரிகின்றதா ? இருக்கின்ற நிர்வாக சபை ஒன்றை செய்ய நிருவாகசபை மாறி புதிய சபை பதவிக்கு வந்ததும் ஏட்டிக்கு போட்டியாக அபிவிருத்தி என்ற போர்வையில் நிதி துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது.
பள்ளிவாயல்களின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை மாறுகின்ற போது புதிய சபை அங்கத்தவர்கள் தாமும் ஏதேனும் சாதித்ததை காட்ட வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருததி திட்டங்களே பெரும்பாலும் நடைபெறுகின்றது.இருக்கும் சக்தி வாய்ந்த கட்டிடங்களெல்லாம் உடைக்கப்பட்டு நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவது எந்தவித அவசியத் தேவைகளும் இல்லாமலாகும்.சில பள்ளிவாயல்களில் தொழும் பகுதியை விட மல சல கூடப்பகுதி ஆடம்பரமாக கட்டப்பட்டு உள்ளது.பல தடவைகள் மலசலகூடம் மட்டும் உடைத்து கட்டப்பட்டுகின்றது.
எனவே இவற்றை எல்லாம்தட்டிக் கேட்க பலம் வாய்ந்த ஒரு அமைப்பும் இல்லை என்பதும் பொறுப்பானவர்கள் யாரும் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்பதும் தான் கவலைக்கு உரிய விடயம்.
நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் கடமை பள்ளிவாயல்களை கட்டுவதிலும் பரிபாலிப்பதிலும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வக்பு சட்டத்தின் பிரிவு 18 பள்ளிவாயல்களின் வருவாயை என்னென்ன விடயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை குறிக்கின்றது.உப பிரிவு 18(h)இன்படி ஊர் ஜமாஅத் தேவை எனக் கருதும் சகல நல்ல விடயங்களுக்கும் வருவாயை பயன் படுத்தலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.அது மட்டுமல்லாமல் ஏழை மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்கும்பயன் படுத்தப்படலாம்.அவர்களின் மரணச்செலவுகளுக்கும் பயன்படுத்தலாம் என்றும்கூறப்பட்டு உள்ளதை எத்தனை பேர் அறிவர்.
அண்மையில் மத்திய மலைநாட்டுத் தலை நகரத்தில் நடை பெற்ற ஒரு வைபவம் பள்ளிவாயல் நிதி எவ்வாறெல்லாம் ஒரு சிலரினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றது என்பதற்கு நல்ல உதாரணமாகும்.நகர்ப் பள்ளிவாயல்களுக்கு எல்லாம் தலைமை வகிக்கும் ஒரு கூட்டத்தால் நடத்தப்பட்ட இந்த வைபவம் என்ன நோக்கத்திற்கு வைக்கப்பட்டது என்பதை சமூகம் தந்தவர்கள் கூட புரிந்து இருக்க மாட்டார்கள்.அது போகட்டும் ஏற்பாட்டாளர்களால் கூட அதற்கான உரிய விளக்கத்தை தர முடிய வில்லை.ஏற்பாடு செய்த அங்கத்தின் முக்கியத்தவர் ஒருவரிடம் கேட்டதும் கிடைத்த பதில் அது ஜமியத்துல் உலமாவின் திட்டங்களில் ஒன்றாகும் என்றார்.
ஆனால் இந்த வைபவத்தை ஒரு உல்லாச ஹோட்டலில் நடத்தினார்கள்.ஏனைய மதத்தினர் தமது வணக்க ஸ்தலத்தை சார்ந்த வைபவங்களை நடத்தும்போது தமது கலாச்சாரத்தை பேணத்தவறுவதில்லை.பள்ளிவாயல்களின் பெயரை மையமாக வைத்து நடந்த இவ்வைபவத்தில் இஸ்லாமிய கலாசாரம் முழுமையாக பேணப்படல் வேண்டும்.இதற்கான பணம் எப்படியும் பொது மக்களுடையது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.இது ஒருவரின் தனிப்பட்ட ரீதியான சுய லாபத்திற்கு நடத்தப்பட்டது என்பது பலருக்கு புரிந்தாலும் எல்லோரும் மௌனித்து தான் இருக்கின்றனர்.இது ஒரு உதாரணமாகும்.இதைப்போல் பலநூறு விடயங்கள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளன.
பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்களே அவற்றின் கீழுள்ள சொத்துக்களின் குத்தகை தாரர்களாக உள்ளனர்.இதுவும் சட்ட விரோதம் என்பது பலருக்கு தெரியாது(பிரிவு 22(1)b ).பள்ளி வாயல்கள் சொத்துக்கள் இவர்களுக்கு மிகக்குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கப்படுகின்றது.அதன்பின்னர் அவர்கள் அதனைகூடியவிலைக்கு இன்னொருவருக்கு குத்தகைக்கு வழங்குகின்றனர்.இதற்கும் பல பள்ளிவாயல்களும் உதாரணங்களாக உள்ளன.
இவற்றுக்கு எல்லாம் மிக மிக முக்கிய காரணம் அதிகாரம் பெற்றவர்கள் தமது கடமையை சரியாக செய்யாமல் இருப்பதேயாகும்.பதவிகள்,அதிகாரங்கள் எல்லாம் இறைவனால் கொடுக்கப்படும் அமானிதங்களே.இதனை சரிவர செயல்படுத்தாத ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்விடத்தில் பதில்கூறியே ஆக வேண்டும் எனவே அதிகாரம் உள்ளவர்கள் தமது கடமையை சரி வரச் செய்ய வேண்டும்.
வக்பு சபை தமது அதிகாரங்களை அமுல் படுத்த வேண்டும்.அதற்கு பொறுப்பான அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.கொழும்பில் மட்டும் இருந்து கொண்டு நாட்டிலுள்ள பள்ளிவாயல்கள் எல்லாவற்றையும் பரிபாலிக்க முடியாது என்றால் பிரதேச ரீதியாக பரவலாக்கக் கூடியதாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வர எமது அரசியல் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பௌத்த விவகாரங்களை மேற்கொள்ள பிரதி ஆணையாளர்கள் பிரதேச ரீதியாக நியமிக்கப்பட்டு உள்ளது போல் முஸ்லிம்பள்ளிவாயல்கள் விடயங்களிலும் பிரதேச ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் கண்காணிப்பின் கீழ் இவை கொண்டுவரப்பட வேண்டும். முழு நாட்டிற்கும் ஒரு பணிப்பாளர்.அவரின் கீழ் மிகச் சிறிய தொகையான சேவையாட்கள்.இவர்களைக்கொண்டு இலங்கையிலுள்ள பள்ளிகள் எல்லாவற்றையும் பரிபாலிப்பதுவும் இலகுவானது அல்ல.
அதற்கும் அப்பால் சிந்தித்தால் ஒவ்வொரு பள்ளிவாயல்கள் பரிபாலனச் சபை அங்கத்தவர்களும் தமது செயல்பாடுகளை தமது மனச் சாட்சிக்கு விரோதமில்லாமல் செய்தாலே போதும்.தமது வீட்டில் ஒரு படிக்கல்லை அகற்றுவதற்கு மும்முறை சிந்திக்கும் நிருவாகிகள் பள்ளிவாயல்களின் படியை மும்முறை உடைத்துக் கட்டுகிறார்கள். இந்நிலை எல்லாம் மாறாத வரை பொதுச் சொத்துக்களின் துஷ்பிரயோகமும் தொடரத்தான் செய்யும்.
No comments:
Post a Comment