Wednesday, January 22, 2014

அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்தும் கடும் பனிப்புயல் - 3,000 விமான சேவைகள் ரத்து



அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவுவதால், 3,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தற்போது குளிர்காலமாகும். வழக்கமாக குளிர்காலத்தில் பனிப்புயல் இருக்கும் என்றாலும், இந்த ஆண்டு குளிர் மிக அதிகமாக உள்ளது. ஆர்டிக் பனிமலைப் பகுதியில் இருந்து கடுங்குளிர் அமெரிக்காவை தாக்கி வருகிறது.



முன்னெப்போதும் இல்லாத வகையில், பல ஏரிகள், நீர்நிலைகள் பனியில் முன்கூட்டியே உறைந்துவிட்டன. நயாகரா நீர்வீழ்ச்சியும் உறைந்துள்ளது. கடுங்குளிரால் மின்சார டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்து மின்தடையும் ஏற்பட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் தற்போது கடுங்குளிருடன், பனிப்புயலும் வீசி வருகிறது. இதனால் அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



இப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், சுற்றுலா தலங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் என்று அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பனிப்புயல் காரணமாக வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், வாகன போக்குவரத்தே இல்லாமல் இப்பகுதி சாலைகள் பனிப்படலமாக காணப்படுகிறது.



பாஸ்டனில் இருந்து வாஷிங்டன் செல்லும் சாலை முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது.இந்நிலையில், தேசிய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி புரூஸ் சல்லிவான் கூறுகையில், ‘‘தற்போதைக்கு பனிப்புயல் குறைய வாய்ப்பில்லை. இந்த சமயத்தில் வாகனங்களில் பயணம் செய்தால், நடுவழியில் சிக்கி, கடுமையான போராட்டத்துக்கு தள்ளப்படும் நிலை உள்ளதால், யாரும் வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளோம்’’ என்றார்.



வாஷிங்டன்னிலும் கடுங்குளிர் நிலவிவருவதால், அரசு ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு, அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல், பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.எனினும், உச்ச நீதிமன்றம் மட்டும் வழக்கம்போல் நேற்று தன்னுடைய பணிகளை கவனித்தது.



பனிப்புயல் காரணமாக, அமெரிக்கா முழுவதும் 3,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர்.டேலேவேர், மேரிலேண்ட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வடக்கு கலிபோர்னியாவில் மட்டும் நேற்று சில பள்ளிகள் திறந்திருந்தன. ஆனால், விர்ஜினியாவில் எதுவும் இயங்கவில்லை.




No comments:

Post a Comment