Monday, January 27, 2014

பெளத்த, முஸ்லிம் உறவை மேலும் பலப்படுத்த விஞ்ஞாபனம் - கொழும்பில் வெளியிடப்படுகிறது



(எப். எம் பைரூஸ்)



இனப் பூசல்களைப் பூண்டோடு ஒழிக்கும் முக்கிய பல ஆலோசனைகள் அடங்கிய விஞ்ஞாபனத்தின் வெளியீட்டு வைபவம் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் பங்குபற்றுதலோடு கொழும்பில் நடைபெறும்.



பெளத்த- முஸ்லிம் உறவை மேலும் பலப்படுத்தி, எதிர்காலத்தில் இரு சமூகங்களும் அன்னியோன்ய உறவு பாராட்டி வாழும் சூழலை உருவாக்குவதற்கும் இந்த ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தரும், நல் இணக்க அறிவுறுத்தல் சம்பந்தமான தேசிய மாநாட்டின் இணைத்தலைவருமான சங்கைக்குரிய கும்புறுகமுவே வஜிர தேரரும், இந்த அமைப்பின் இணைத்தலைவரும், முன்னாள் சபாநாயகரும், இஸ்லாமிய நிலையத்தலைவருமான எம். எச். முஹம்மத்தும் இந்த விஞ்ஞாபனத்தில் கூட்டாகக் கைச்சாத்திடுவர்.



கொழும்பு நூதனசாலை கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 02ஆம் திகதி மாலை நடைபெறும் இந்த வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி வழக்குரைஞர் பாயிஸ் முஸ்தபா, வண. கும்புறுகமுவே வஜிர தேரர் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்துவர்.



களனி ரஜமகா விகாரை, மஹாபோதி சங்கம், கங்காராமய, பெல்லன்வில ரஜமகாவிகாரை ஆகியவற்றின் பிரதம குருமார்களின் ஆசீர்வாதத்துடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்படும்.



முஸ்லிம்களின் தேசப்பற்றை முன்னணி பெளத்த பிக்குமார் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். பெளத்த-முஸ்லிம் சகவாழ்வும், இணக்கப்பாடும் வளர்ந்தோங்க வேண்டுமென்பதே தமது எண்ணப்பாடாகுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆவணம் வெளியிடப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் இரு சாராருக்கும் இடையில் வீண் சந்தேகங்கள் உருவாக மாட்டாது.



அன்னியோன்ய உறவு பலப்படும், நம்பிக்கை உருவாகும்.



இத்தகையதொரு தேசிய நல் இணக்க முயற்சியில் ஆர்வமுடன் முன்வந்த முன்னணி பெளத்த பிக்குமார்களை நாம் பாராட்ட வேண்டும் என்று இணைத்தலைவர் எம். எச். முஹம்மத் தெரிவித்தார்.




No comments:

Post a Comment