(vi) மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி மக்களை குழப்புவதற்கு இன்று சிறு பிரிவினர் முயற்சிக்கின்றனர். ஆனால் அது மதங்கள் மீதான பற்றினால் செய்யப்படுவதில்லை. மாறாக தம்மீது இருக்கின்ற பற்றின் காரணமாகவே இவ்வாறு செய்கின்றனர் என்று கத்தோலிக்கத் திருச்சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை தெரிவித்தார்.
எந்தவொரு மதமும் கொலை செய்யுமாறோ அல்லது திருட்டு செயலில் ஈடுபடுமாறோ கூறவில்லை. மதங்களுக்கு இடையில் காணப்படுகின்ற வேற்றுமைகளிலும் பார்க்க ஒற்றுமைகளே அதிகம் உள்ளன. மதங்களை பாதுகாப்பதற்காக ஏனைய மதங்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற மத நல்லிணக்கம் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தெற்காசியாகொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த செயலமர்வில் நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான பரிந்துரை தொகுதி ஒன்றும் வெளியிடப்பட்டது.
நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மதத் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர். ஒஸ்வல் கோமிஸ் ஆண்டகை தொடர்ந்து உரையாற்றுகையில்,
மதத்தின் பெயரால் பிரச்சினை ஏற்படுத்த முயற்சி
மதத்தின் பெயரால் நாட்டில் இல்லாத பிரச்சினை ஒன்றை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் முயற்சிப்பதாக தெரிகின்றது. நாட்டில் எந்தவொரு மதமும் கொலை செய்யுமாறோ அல்லது திருட்டு செயலில் ஈடுபடுமாறோ கூறவில்லை. அவற்றை அனைத்து மதங்களும் எதிர்க்கின்றன. தவறுகள் செய்வதை எந்த மதமும் அனுமதிக்கவில்லை.
வேற்றுமையைவிட ஒற்றுமையே அதிகம்
அந்தவகையில் மதங்களுக்கு இடையில் காணப்படுகின்ற வேற்றுமைகளிலும் பார்க்க ஒற்றுமைகளே அதிகம் உள்ளன. வரலாற்றில் எமது நாட்டில் அனைத்து மதங்களும் மிகவும் ஒற்றுமையாக இருந்துள்ளன. அனுராதபுரம் யுகத்தில் இலங்கையில் யக்ஷதர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அரசவையிலும் இருந்துள்ளனர். அத்துடன் 1915 இலங்கையில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்தின்போது மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டனர். கத்தோலிக்க திருச்சபை அன்று முன்வந்து வழங்கிய ஆரோக்கியமான பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
மக்களை குழப்ப முயற்சி
ஆனால் அவ்வாறான வரலாறு தெரியாதவர்கள் இன்று மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி மக்களை குழப்புவதற்கு இன்று சிறு பிரிவினர் முயற்சிக்கின்றனர். ஆனால் அது மதங்கள் மீதான பற்றினால் செய்யப்படுவதில்லை. மாறாக தம்மீது இருக்கின்ற பற்றின் காரணமாகவே இவ்வாறு செய்கின்றனர். தமது மதங்களை பாதுகாப்பதற்காக ஏனைய மதங்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொள்ளக்கூடாது.
கடந்த 30 வருடகாலமாக பாரிய பிரச்சினை காரணமாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டோம். இலங்கையில் மட்டுமல்ல ஆசியாவின் வேறு நாடுகளிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருந்துள்ளன. இது அரசியல் பிரச்சினை அல்ல. எமது நாட்டின் எதிர்காலம் தொடர்பான விவகாரம். ஆரோக்கியமான எதிர்காலத்தை அடைந்துகொள்ள எமது பங்களிப்பை வழங்கவேண்டும். எனவே இங்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.
கொட்டுகொட தம்மாவாச தேரர்
கொட்டுகொட தம்மாவாச தேரர் உரையாற்றுகையில்,
நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்த வரலாறு உள்ளது. ஆனால் தற்போது மத ரீதியில் சில சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிப்பது தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். பிரச்சினைகளை தோற்றுவிக்கும் பிரிவினர் உலகில் எப்போதும் இருந்துள்ளனர். தற்போதும் அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். குழப்பத்தை ஏற்படுத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.
அரசியல் சக்திகள் இவ்வாறு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். இவற்றை புரிந்துகொண்டு நாம் செயற்படவேண்டும். மதத் தலைவர்கள் இணைந்து பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்றார்.
குகானந்த ஷர்மா
கருத்தரங்கில் குகானந்த ஷர்மா குருக்கள் உரையாற்றுகையில்,
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா நாட்டில் இருக்கவில்லை. ஆனால் சம்பவம் கேள்விபட்டவுடன் அவர் நாடு திரும்பினார். அனர்த்தங்களை பார்த்துவிட்டு ஐந்து நாள் கழித்து சந்திரிகா குமாரதுங்க மத வைபவம் ஒன்றை நடத்தினார். அதுபோன்று இன்றும் அவர் ஒரு கூட்டத்தை தற்போது நடத்துகின்றார். தற்போதைய நிலைமையில் நாட்டில் சில மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட பிரதேச மக்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும் என்றார்.
மாஹிர் மெளலவி
நிகழ்வில் உரையாற்றிய இஸ்லாம் மதத் தின் மாஹிர் மெளலவி குறிப்பிடுகையில்
காலத்துக்கு ஏற்ற ஒரு முக்கிய விடயத்தை தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நாட்டில் அபிவிருத்தி இடம்பெறுகின்றமை எங்களுக்குத் தெரிகின்றது. ஆனால் எமது மனது மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே இந்த அபிவிருத்தியின் பயனை எம்மால் அனுபவிக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment