Saturday, May 24, 2014

ஹாஜி கலீமுல்லா உற்பத்தி செய்த மாம்பழத்திற்கு, மோடியின் பெயர்



உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாம்பழ விவசாயி, தான் உற்பத்தி செய்து அறுவடைக்காக காத்திருக்கும் புதிய ரக மாம்பழத்திற்கு "நமோ ஆம்' என்று பெயர் வைத்துள்ளார்.



இதுகுறித்து, விவசாயியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஹாஜி கலீமுல்லா சனிக்கிழமை கூறியதாவது:



தற்போது புதிய மரபணுவின்படி உற்பத்தி செய்யப்பட்டுள்ள மாம்பழம் அழகு, சுவை என பல்வேறு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.



இந்தப் புதிய ரக மாம்பழம் மோடிக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால், அவருக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த மாம்பழத்திற்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளேன்.



முதல் மாம்பழம் மோடிக்கு அனுப்பப்படும். அவர் சுவைத்துப் பார்த்து, இந்த மாம்பழத்திற்கு உலகச் சந்தையில் ஒரு நல்ல வாய்ப்பை பெற்றுத் தருவார்.



இந்த புதிய ரக மாம்பழம் சந்தைக்கு வர சிறிது காலம் ஆகும் என்பதால், மாம்பழ விரும்பிகள் சில நாள்கள் காத்திருக்க வேண்டும்.



இதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ள மோடியின் பங்களிப்பு உலக அரசியலில் பெரிய அளவில் இருக்கும்.



உலகில் நிலவி வரும் சச்சரவுகளை முடிவுக்குக் கொண்டுவர அவரால் முக்கியப் பங்காற்ற முடியும்.



அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்று மோடி மீது முஸ்லிம் சமுதாயத்தினரும் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார் ஹாஜி கலீமுல்லா.



"மாம்பழ அரசன்' என்று அழைக்கப்படும் கலீமுல்லா முன்பும் இதுபோல் உற்பத்தி செய்த மாம்பழங்களுக்கு பல தலைவர்களின் பெயரை வைத்துள்ளார்.



மாம்பழ உற்பத்திக்கு பெயர் பெற்ற லக்னௌ மாவட்டம், மாலிஹாபாத் நகரில் மரபணு முறையில் ஒரே மரத்தில் இருந்து 300 ரக மாம்பழங்களை கலீமுல்லா உற்பத்தி செய்துள்ளார்.


No comments:

Post a Comment