மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு அருகாமையில் பாரிய மனித புதைகுழியொன்று காணப்படுவதாகவும், அதில் புதைக்கப்பட்ட சடலங்கள் முஸ்லிம்களினது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் தற்போது கிழக்கில் விசாரணைகளை நடத்தி வருகின்றது.
இந்த சடலங்கள் முஸ்லிம் மக்களினது என முஸ்லிம் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரனகம தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எந்த இடத்தில் புலிகள் முஸ்லிம்களை கொன்று புதைத்தார்கள் என்பதனை காண்பிக்கத் தயார் என குறித்த முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
1990ம் ஆண்டில் ஜூலை மாதம் 12ம் திகதி 167 பேர் இவ்வாறு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் இந்தக் கொலைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆதாரங்களின் அடிப்படையில் இந்த மனித புதை குழி தோண்டி எடுக்கப்பட உள்ளதாக விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
விசாரணைக்குழுவின் பணிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித ஆதரவினையும் வழங்கவில்லை எனவும், விசாரணைக்குழுவின் மீது நம்பிக்கையில்லா விட்டால் ஆயிரக் கணக்கானவர்கள் முறைப்பாடு செய்திருக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரையில் தமிழ் பேசும் குடும்பங்களிடமிருந்து 13000 முறைப்பாடுகளும், படைகளைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களிடமிருந்து 5000 முறைபாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். GTN
No comments:
Post a Comment