Friday, June 20, 2014

முஸ்லிம்களை காப்பாற்ற முடியாத ஜனாதிபதி, பதவி விலகவேண்டும் - பாலித்த தெவரப்பெரும MP





யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறும் ஜனாதிபதியால் அளுத்கம பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களை காப்பாற்ற முடியாமல் போனதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.



முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின்போது, சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.



அளுத்கம, தர்காநகர் மற்றும் பேருவளை உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்த வன்முறைகளைத் தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியிலும், அண்டையில் உள்ள வெலிப்பென்ன நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் பல எரிக்கப்பட்டன. வீடுகளும் தாக்கப்பட்டன.



இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் குடும்பமொன்று மரண வீடொன்றுக்குச் செல்வதற்காக அளுத்கமையிலிருந்து வெலிப்பென்ன செல்லவேண்டியிருந்தது.



அந்தக் குடும்பத்தை பாதுகாப்பாக அழைத்துச்சென்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மீதும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர்.



தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாலித்த தெவரப்பெரும நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சனை எழுப்பியிருந்தார்.



'வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பௌத்தர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ சொல்லமுடியாது. ஞானசார என்கின்றவர் நடத்துகின்ற தனியான மதப்பிரிவின் வன்முறையாளர்கள் தான் இந்த தாக்குதல்களை நடத்தினார்கள். சரியென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் பதவி விலகவேண்டும்' என்றார் பாலித்த தெவரப்பெரும.



'முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடித்துவைத்த ஜனாதிபதியால் ஓரிரு கிலோமீட்டர் பரப்புக்குள் வாழும் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக ஜனாதிபதி பதவி விலக வேண்டும்' என்றார் அவர்.



காவல்துறையினர் சுமார் 500 பேர் வீதியில் நின்றுகொண்டிருக்க தம்மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெவரப்பெரும கூறினார்.



'சின்னப் பிள்ளைகள் 5 பேர் என்னுடன் இருந்தார்கள். கைக்குழந்தைகளும் இருந்தார்கள். வயதான தாய்மாரும் கர்ப்பிணித் தாய்மார் இரண்டுபேரும் வாகனத்தில் இருந்தனர். நான் வாகனத்தை முடிந்தவரை வேகமாக ஓட்டிவந்தேன். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டு பக்கமும் இருந்துகொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பெற்றோல் போத்தல்கள், மணல் போத்தல்கள், கற்கள். கம்புகளைக் கொண்டு தாக்கினார்கள்' என்றார் ஐதேக எம்.பி.



அரசியல்வாதிகள் தேர்தல் காலம் வரும்வரை வாய்மூடி மௌனிகளாக இருக்காமல் மக்களின் பிரச்சனைகைளத் தீர்க்க உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.



'வட்டரெக்க விஜித்த தேரரை கட்டிப்போட்டுத் தாக்கியுள்ளனர். என்னையும் அப்படித் தாக்குவார்கள். நீதிக்காக அப்படி அடிவாங்குவதில் பிரச்சனை இல்லை. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு, தேர்தல் வரும்வரை தங்களின் குடும்பத்தாரை மட்டும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காமல் நேர்மையாகப் பேசி உயிர் விடுவது எங்களுக்கு மகிழ்ச்சி தான்' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும.




1 comment:

  1. The government has the power. It is the duty of the government ban BBS

    ReplyDelete