அளுத்கம, பேருவளை சம்பவத்தினால் சிங்கள பௌத்தர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று 01-07-2014 கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குமரன் பத்மநாதனை பாதுகாக்கும் தரப்பினர் என்னை தேசத் துரோகி என குற்றம் சுமத்தினால் பரவாயில்லை. ஊடகவியலாளர்களை பாதுகாக்க நான் தொடர்ச்சியாக குரல் கொடுப்பேன். குமரன் பத்மநாதனை பாதுகாப்பதா அல்லது ஊடகவியலாளர்களை பாதுகாப்பதா என்ற பிரச்சினை உருவாகியுள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை முற்று முழுதாக ஒடுக்கியுள்ளது.
அளுத்கம சம்பவம் தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் மறைக்கப்பட்டமைக்கு காரணம் சமாதானத்தை நிலைநாட்டுவதல்ல. அரசாங்கத்தின் பாவ காரியங்களை மறைத்துக் கொள்ளவேயாகும். அளுத்கம, பேருவளை சம்பவங்கள் தொடர்பிலான செய்தி அறிக்கையிடலுக்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் தடைகளை ஏற்படுத்தியிருந்தது.
சில ஊடகங்களுக்கு எழுத்து மூலமான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. பொதுவாக மதப்பிரச்சினை ஏற்பட்டால் அதனை தூண்டி விடாது அமைதிப்படுத்தும் வகையில் செய்தி அறிக்கையிட வேண்டியது ஊடகங்களில் கடமையாகும்.
எனினும் அரசாங்கம் ஒரு பக்கச்சார்பான செய்திகளை வெளியிட ஊடகங்களை பணித்திருந்தது. தர்ஹா நகர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என கோரியிருந்தது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment