Monday, September 15, 2014

ஜனாதிபதி நேரடியாக தேர்தல் சட்டங்களை மீறும்போது, பொலிஸாரினால் ஒன்றும் செய்யமுடியாது - JVP



ஊவா மாகாணத்திலுள்ள மக்களுக்கு கடந்த காலங்களில் அரசாங்கம் சரியாக பணியாற்றியிருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து சந்தி சந்தியாக சுற்றித் திரியத் தேவையில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.



கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.



ஊவா மாகாண சபைத் தேர்தல் பல்வேறு வகையிலும் சாதனை படைக்கப் போகின்றது. இலங்கையில் அதிகமாக அரச பலத்தைப் பிரயோகித்து நடாத்திய ஒரு தேர்தலாக இந்தத் தேர்தல் அமையவுள்ளது.



அரசாங்கம் இந்த தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தை இழக்கும் என்பது உறுதியாகிவிட்டது.



ஜனாதிபதி களத்தில் இறங்கி நேரடியாகப் பணியாற்றும் ஒரு தேர்தல் களமாக ஊவா மாறியுள்ளது. அபேட்சகர்கள் ஒரு பக்கம் இருக்க ஜனாதிபதி மக்களிடம் வாக்குக் கேட்கின்றார்.



அரசாங்கம் முன்னரே இந்தத் தேர்தலுக்காக தயாராகி மக்களுக்கு சேவை செய்திருந்தால் இவ்வளவு வன்முறையில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கத் தேவையில்லை. பொருட்களை விநியோகித்திருக்க வேண்டியதில்லை.



ஜனாதிபதி நேரடியாக தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் போது பொலிஸாரினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.



தேர்தல் களத்தை இலக்கு வைத்து பல திறப்பு விழாக்களை ஏற்பாடு செய்துள்ளார். இது தேர்தல் சட்டத்துக்கு நேர் எதிரானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




No comments:

Post a Comment