Saturday, February 22, 2020

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம்கள்கூட இம்முறை ஆதரவு வழங்க தயார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள்கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள் மூலம் உறுதியாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். 

கொத்மலை பகுதியில் இன்று (22) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரிடம், குறித்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியதாவது, 

" பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கறிக்கையை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளதால் நாட்டில் நிதி நெருக்கடி எதுவும் ஏற்படாது. மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நிதி அதிகாரம் ஜனாதிபதியின் கீழ் வந்துவிடும். அதன்பின்னர் சிறந்த முறையில் நிதி முகாமைத்துவம் இடம்பெறும். 

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின்போது வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்கியவர்கள், நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டவர்கள் என ஒப்பந்தக்காரர்களுக்கான வழங்கவேண்டிய கொடுப்பனவை வழங்கும் நோக்கிலேயே நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், குரோத மனப்பான்மையால் அதனை சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி நிராகரித்துவிட்டது. 

அதேவேளை, கூட்டணி அமைத்தாலும், அமைக்காவிட்டாலும்கூட தேர்தல் காலங்களில் விருப்புவாக்குக்காக கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது வழமையே. 1978 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தனவால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறைமையே இதற்கு காரணம். ஶ்ரீமாவோ காலத்திலிருந்து இதனை மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டாலும் முடியாமல்போனது. சிறு கட்சிகள் இந்த தேர்தல் முறைக்கு ஆதரவாக இருக்கின்றன. 

ஆனால், அடிப்படைவாதிகள், இனவாதிகள், சிறுகட்சிகள் இல்லாமல் நாட்டை ஆளமுடியும் என்பதை மகாநாயக்க தேரர்களின் தலைமையில் நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலின்போது நிரூபித்துக்காட்டியதையும் நாம் மறந்தவிடக்கூடாது. 

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் எமக்கு 127 ஆசனங்கள் கிடைப்பது உறுதி. இருந்தாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையே எமது இலக்கு. அதற்காக நுவரெலியா, அம்பாறை, வவுனியா போன்ற மாவட்டங்களை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிறை உறுதிப்படுத்துவதற்காகவே என்னை இங்கு அனுப்பிவைத்துள்ளனர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருவதாகவும், ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள்கூட இம்முறை அவர்கள் தலைமை வழங்கும் கட்சிக்கு வாக்களிப்பார்கள் எனவும் கருத்து கணிப்புகள் மூலம் உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment