ஐக்கிய தேசியக் கட்சி தாம் எதிர்பார்த்ததையும் விட பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக பொதுத் தேர்தல் முடிவுகள் ஊடாக தெரிந்துக் கொள்ள கூடியதாக இருப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹர்ஷ டி சில்வா, தற்போதே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியின் அழிவை யாராளும் தடுக்கமுடியாது என்றும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை -16- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது ,
ஐக்கிய தேசியக் கட்சி குறைந்தது எட்டு ஆசனங்களையாவது பெற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஒரு ஆசனங்களை கூட அதனால் தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை. இது பெரும் கவலைக்குறிய விடயமாகும். தேர்தல் முடிவுகளின் போது பல இலட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதை புறக்கணித்துள்ளமை காணக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் ஐ.தே.க. வின் ஆதரவாளர்கள் இலட்சக்கணக்கான பேர் வாக்களிக்காமல் இருந்துள்ளதுடன் , ஏனையோர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கே வாக்களித்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஐ.தே.க.வில் ஏற்பட்ட பிளவின் காரணமாக , அதன் ஆதரவாளர்கள் என்ன செய்வது என்று அறியாததாலே வாக்களிப்பதை புறக்கணித்துள்ளனர். இந்த நிலைமையை எதிர்வரும் காலங்களில் மாற்றிமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கட்சியின் அழிவை யாராளும் தடுக்க முடியாமல் போய்விடும். இதனால் கடந்த காலத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவுச் செய்யப்பட்டிருந்த எமது சக வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இது பெரிதும் கவலைக்குறிய விடயமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிக்கா பிரேமச்சந்திர , சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பீ பெரேரா ஆகியோர் மக்கள் மத்தியிலிருந்து மக்களுக்கா பேசியவர்கள், தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது கடுமையான உழைத்தார்கள். ஆனால் இன்று தோல்வியடைந்துள்ளனர்.
எமது கட்சியின் தேசியப்பட்டியல் தெரிவில் பங்காளி கட்சிகளுக்கு இடம் வழங்காததினால் அவர்கள் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் , அவ்வாறு எந்த விபரீதமும் ஏற்படாது. ஏன் என்றால் எமது பங்காளி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தேசியப்பட்டியல் தொடர்பில் முடிவுகளை எடுத்திருந்தார்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் தமிழ் பத்திரிகை ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தமை அவதானிக்க கூடியதாக இருந்தது. அதனால் எங்கள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

No comments:
Post a Comment