Sunday, August 16, 2020

அபாயகரமான விளைவுகளுக்கு UAE தயாராக இருக்க வேண்டும் - ஈரான் எச்சரிக்கை


இஸ்ரேலுடன் ராஜாங்க உறவுகள் மேற்கொண்டுள்ளதை ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்றுச் சிறப்பானது என்று கொண்டாடும் நிலையில், அபாயகரமான விளைவுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக இருக்க வேண்டும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலுடன் ராஜாங்க உறவு மேற்கொள்ளும் முதல் வளைகுடா அரபு நாடாகும் ஐக்கிய அமீரகம். மேலும் இஸ்ரேலுடன் உறவு வைத்துக் கொள்ளும் 3வது அரபு நாடாகவும் ஆனது ஐக்கிய அமீரகம்.

இந்த நிலையில் ஈரான் இந்த இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக ஒப்பந்தத்தை ‘வெட்கக் கேடானது” என்றும் “தீமையான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஜாங்க உறவு மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிக்கும் இது அமீரக அரசுக்கே அபாயகரமானதாக முடியும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி அமீரகத்தின் இந்த ஒப்பந்தத்தை கண்டித்துள்ளார். தொலைக்காட்சியில் அவர் இது தொடர்பாகக் கூறும்போது,

இஸ்ரேலுடன் உறவுகளை சாதாரண இயல்புநிலைக்கு கொண்டு சென்று ஐக்கிய அரபு அமீரகம் பெரிய தவறைச் செய்துள்ளது.

இந்தப் பகுதியில் இஸ்ரேல் காலூன்ற அனுமதிக்கலாமா? என்றார். ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாத் ஜரீப், இந்த ஒப்பந்தம் அரபு மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான துரோகம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தை கண்டித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் போக்குக்கு ஆதரவளிக்கும் முடிவாக இது அமையும் என ஈரான், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சாடியுள்ளது.

1 comment: