(நா.தனுஜா)
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் போட்டி அடிப்படையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பது மிகப்பாரிய அரசியல் குற்றம் என்று கலாநிதி குணதாஸ அமரசேகர சாடியுள்ளார்.
அத்துடன் நடுநிலைமை வகிப்பதாகக் கூறிக்கொண்டு அரசாங்கத்துக்குள் இருக்கும் அடிப்படைவாதிகளின் நியாயமற்ற அரசியல் கோரிக்கை வலைகளுக்குள் ஜனாதிபதி அகப்பட்டுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
மேற்கண்டவாறு வலியுறுத்தி அவரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்யவேண்டும் என்று அரசாங்கம் அறிவித்ததுடன், அது வர்த்தமானி அறிவித்தலாகவும் வெளியிடப்பட்டது.
அந்தச் சடலங்களை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றமை தொடர்பில் பல்வேறு ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களைத் தகனம் செய்வதை எவ்வித இன, மதபேதமுமின்றி பொதுவாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.
எனினும் அத்தகைய பொதுவான நிலைப்பாடு குறித்தவொரு பிரிவினருக்கு அவர்களின் மதநம்பிக்கையின் அடிப்படையில் அதிருப்தியையோ அல்லது வேதனையையோ ஏற்படுத்தலாம். முதலாவதாக இவ்வாறு தகனம் செய்யும் உத்தரவு உயிரிழக்கும் அனைத்து சடலங்களுக்கும் பொதுவானதல்ல.
மாறாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போருக்கு மாத்திரமே பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக இது குறுங்காலத்திற்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கும். அதனூடாக அந்த சடலங்களிலிருந்து எவ்வகையிலேனும் பிறிதொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment