Tuesday, April 6, 2021

'திருமதி சிறிலங்கா' புஷ்பிகாவின் முறைப்பாடு தொடர்பில் மருத்துவ சான்றிதழ் பெறவுள்ள பொலிசார்


சர்ச்சைக்குரிய சம்பவத்தின் பின்னர் திருமதி சிறிலங்காவாக மீண்டும் முடிசூட்டப்பட்ட புஷ்பிகா டி சில்வாவினால் காவல்துறையில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டின் விசாரணைகளுக்கு அமைவாக மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கிரீடத்தை அவரிடம் இருந்து அகற்றிய போது தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவத்தினை உறுதி செய்வதற்காக இந்த மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்ளவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் இதுவரை 8 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'திருமதி சிறிலங்கா' அழகிப் போட்டி நிகழ்ச்சியில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இந்த போட்டியில் முதலில் திருமதி புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, நிகழ்வின் பிரதம விருந்தினரால் முடிசூட்டி கௌரவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் திருமதி சிறிலங்கா கரோலைன் ஜூரி, வெற்றி பெற்ற போட்டியாளர் அதற்கு தகுதியற்றவரென அறிவித்ததோடு வெற்றியாளரது கிரீடத்தையும் நீக்கினார்.

போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதோடு விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என்பதே அதற்கான காரணமாகும் எனவும் அவர் அறிவித்தார்.

இதனையடுத்து இந்த போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட போட்டியாளர், திருமதி சிறிலங்காவாக முடி சூட்டப்பட்டார்.

எனினும் புஷ்பிகா டி சில்வா, விவாகரத்து பெற்றவர் என உறுதி செய்வதற்கான எழுத்துமூல ஆவணம் இல்லை என்பதால் திருமதி சிறிலங்காவாக நேற்றைய தினம் அவர் மீண்டும் முடிசூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment