- Imran Farook -
சர்வதேச பந்தாட்டாங்கள் வெறும் விளையாட்டுக்கள் தான் என நீங்கள் நினைத்துக்கொண்டால் அது உங்கள் பேதமையைத்தான் காட்டுகிறது. எனக்கும் உங்களுக்கும் வேண்டுமானால் இந்தப் பந்தாட்டங்கள் பொழுதுபோக்காகவும் கொண்டாட்டமாகவும் இருக்கலாம்.
ஆனால் இந்த ஆட்டங்கள்தான் காட்டுத்தனமான முதலாளி வர்க்கத்தின் தங்கச் சுரங்கம், கார்ப்பரேட்டு மாபியாக்களுக்கு பணம் கொட்டும் பெரும் சந்தை, பீபாஃ அதிபர்களின் கடா வெட்டு விருந்து, பாழ்பட்ட ஊடகங்களின் கொழுத்த தீனி, சூதாட்ட உலகின் கொள்ளை அரங்கம்,
அரசியல் விசமிகள் நாட்டு ஜனங்களை ஏமாற்ற பயன்படுத்தும் மந்திர அட்டை,
பாவப்பட்ட ஜனங்களை திசை திருப்பி அவர்களை மயக்க வைக்கும் மதுவிருந்து.
நாசமாப்போன கார்ல் மார்க்ஸ்: "மதங்கள்தான் மக்களின் அபின்" என்று சொல்லிவிட்டு சென்றான். உண்மையில் மக்களின் புத்தியை பேதலிக்க வைக்கும் அபின் இந்த ஆட்டங்கள்தான். இவைகள் வெறும் விளையாட்டுக்கள் மட்டுமல்ல! உலகலாவிய வலைவிரிப்புக்கள். இதிலே அரசியல் பெருச்சாளிகளோடு ஊடகப் பெருச்சாளிகள் கைகோர்ப்பார்கள், கார்ப்பரெட்டு உலகம் களியாட்ட உலகோடு கைபிடிக்கும்.
விளையாட்டு வீரர்களுக்கு கோடிக்கணக்கில் புகழும் பணமும் கிடைக்கும். ஊடகங்களுக்கு பார்வையாளர்கள் அதிகரிக்கும், விளம்பரங்களால் பணமும் கொட்டும், பீபாஃ நிர்வாகத்துக்கு பணமும், செல்வாக்கும் அதிகரிக்கும், மனிதாபிமானமற்ற முதலாளித்துவத்துவம் தனது சந்தைப் பொருள்களை விளம்பரப்படுத்தி தனது பணப் பசியை தீர்த்து ஏப்பம் விடும்.
பாவப்பட்ட அந்த குடிமகன் கொடியை ஏந்தி வெற்றுக் கோசத்தோடு தேசபக்தியை வெளிப்படுத்துவான். தாயகப் பற்றை விசுவாசத்தோடு வெளிப்படுத்துவான். சீரான நாடுகளும் சரியான நாகரீகங்களும் காலில் சுழலும் தோல் பந்தாலும் அதன் பினால் ஓடும் விளையாட்டு வீரர்களின் பாதங்களாலும் கட்டியெழுப்பப் படுவதில்லை என்பது அவர்களுக்கு தெரியாது. அவைகள் அறநெறிகளாலும் உன்னதமான பண்பாடுகளாலும் முன்னேற்றங்களாலும் கண்பிடிப்புக்களாலும் நீதி நேர்மையாலும்தான் கட்டமைக்கப்படும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
நசுக்கப்பட்ட வெகுஜனங்களைப் பொறுத்தவரை, ஒரு மாதம் முழுவதும் திரைகளுக்கு முன்னால் இருப்பார்கள். பேச்சும் மூச்சும் சுழலும் பந்து பற்றியே இருக்கும். மெய் மறந்து தற்காலிக கனவுலகில் லயித்திருப்பார்கள். பரிதபகரமான நிகழ்காலமும் கண்ணில் படாது, இருள்மயமான எதிகாலம் பற்றியும் யோசிக்க மாட்டார்கள். உற்சாக வெள்ளத்தில் மூழ்கியிருப்பார்கள்.
ஆட்டம் முடிந்து டோஸேஜ் தீர்ந்து காலை விடிந்து, தூக்கம் கலைந்து, புத்தி தெளியும் போது நிஜவுலகை காண்பார்கள், தனக்கான சோத்துக்கான வழியை தான்தான தேட வேண்டும் என்பது அந்த குடிமகனுக்கு அப்போதுதான் தெரியவரும்.
✍ தமிழாக்கம் / imran farook

No comments:
Post a Comment