Monday, February 24, 2014

அமெரிக்காவை அச்சுறுத்தும் போலியோ



அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் வாழும் குழந்தைகளிடையே போலியோ போன்ற அரிய வகை நோய்த்தாக்கம் ஒன்று தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோயை குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் இதுநாள் வரை கண்டறியப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



பிலடெல்பியா மாகாணத்தில் நடைபெற்ற அமெரிக்கன் அகாடமியின் நரம்பியல் துறையின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள், திடீரெனப் பக்கவாத நோயால் தாக்கப்பட்ட ஐந்து சிறுவர்கள் பற்றி தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.



உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் போலியோ வைரஸ் நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளபோதிலும், போலியோவை ஒத்த பக்கவாதப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் நோய்கள் காணப்படுவதாக ஸ்டான்போர்ட் நரம்பியல் நிபுணரும் இந்த வழக்கு அறிக்கைகளின் தலைவருமான கீத் வான் ஹாரன் குறிப்பிட்டார்.



இதேபோன்ற நோய்த்தாக்கம் ஒன்று கடந்த பத்து வருடங்களில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா குழந்தைகளிடமும் காணப்பட்டது என்று கூறிய ஹாரன், தற்போது சிகிச்சைக்கு வந்துள்ள இந்த நோயாளிகள் மூலம் கலிபோர்னியாவிலும் இந்த நோய்த்தாக்கம் தொடர்ந்துள்ளது தெரியவருகின்றது என்றும் தெரிவித்தார்.



மேலும், இந்தக் குழந்தைகள் அனைவரும் போலியோ தடுப்பு மருந்து பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி போலியோ நோய்க்கான பரிசோதனையிலும் அவர்களுக்குப் போலியோ நோய்த்தாக்கம் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. ஆனால் அனைவருக்கும் மூட்டுகள் செயல்பாடு குறைந்த இரு நாட்களுக்குள் பக்கவாதம் தாக்கியுள்ளது. இவர்களில் மூன்று பேருக்கு இந்த நோய்க்குமுன் சுவாசக் கோளாறுகளும் தென்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இந்த ஐந்து பேரில் இருவருக்கு என்டரோவைரஸ்-68 சோதனையில் சாதகமான அறிகுறிகளும் மற்ற மூவருக்கும் நேர்மறையான முடிவுகளும் வெளிவந்துள்ளன.



இது மிகவும் அரிய வகை நோயாகத் தென்படுவதை வலியுறுத்திய ஹாரன், குழந்தைகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் பெற்றோர்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவர்களை அணுகவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment