எகிப்தின் அதிபர் முகமது மோர்சியைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கிய அந்நாட்டின் ராணுவத்தலைமை ஹசேம்-எல்-பெப்லாவி தலைமையில் இடைக்கால அரசையும் அமைத்தது. இந்த இடைக்கால அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக ராணுவத்தலைவரான அப்துல் பெட்டா அல் சிசியே அதிபராக பதவி ஏற்றார். தற்போது இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் அந்நாட்டின் அதிபர் தேர்தலில் சிசி பங்கு பெறும்வண்ணம் எகிப்து அரசு இன்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிபர் முகமது மோர்சி பதவி இறக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும், மோர்சியின் லிபரல் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறைப்பிடிக்கப்பட்டனர். அப்போது ராணுவ ஆதரவு அதிகாரிகள், சர்வாதிகாரியாக விளங்கிய ஹோஸ்னி முபாரக்காலத்திற்கே எகிப்தை அழைத்துச் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதினர். அதன்பின் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்ட பெப்லாவியும் எகிப்தில் நிலவிவந்த பொருளாதார நெருக்கடிக்கு பயனுள்ள, திறமையான தீர்வுகளைக் கொண்டுவர இயலவில்லை.
இன்று தனது அமைச்சரவை பதவி விலகுவதாக அறிவித்தபோதும் அதற்கான காரணத்தை அவர் தனது உரையில் தெரிவிக்கவில்லை. எனினும், பாதுகாப்பு, பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அரசியல் குழப்பங்கள் போன்றவற்றிலிருந்து எகிப்து நாட்டை வெளிக்கொண்டுவர தனது அரசு மிகவும் முயற்சி செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியான காலகட்டத்தில் என்ன செய்யவேண்டுமோ அதனை இந்த அரசு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அரசின் தகவல் தொடர்பாளர் ஹனி சலா, இது மாற்றத்திற்கான நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2011ல் ஹோஸ்னி முபாரக்கைத் தூக்கியெறிந்தபோது புதிய ஜனநாயக அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட எகிப்தில் எந்த பெரிய மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment