கிழக்கு மாகாணத்தில் இன்றிருக்கும் சூழ்நிலையில் அரபுக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை மட்டுமே பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருக்கும். வேறு எதனையும் செய்யமுடியாது என முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஆரையம்பதியில் வேத சிவாகம பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மிகநீண்ட வரலாற்றை கொண்ட இந்துமதமானது அழிந்துபோய்விடக்கூடாது. இந்து தர்ம போதனைகள், பூசைமுறைகள் என்பன மக்கள் மத்தியில் சரியான முறையில் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.
நாங்கள் இந்து ஆலயங்களின் ஒன்றியம் அமைத்திருக்கின்றோம். ஆனால் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் இயங்கவில்லை. அதேபோல் இந்து குருமார்களின் ஒன்றியமும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் இயங்கவில்லை. இவை பலமானதொரு கட்டமைப்பின் கீழ் இயங்காததன் காரணமாக ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலிருக்கின்றது.
இந்துமதத்தை பின்பற்றும் நாங்கள் வரலாற்றில் என்றென்றும் தவறிழைத்து வந்திருக்கின்றோம். இவ் ஒன்றியங்கள் பலமானதொரு கட்டமைப்பின் கீழ் இயங்கவில்லை என்பதற்கு பல உதாரணங்களை குறிப்பிடலாம்.
திருகோணமலையில் அமைந்துள்ள சிவன் ஆலயம் 3000ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் புத்தபெருமான் பிறப்பதற்கு முன்னர் இங்கு பலமானதொரு கட்டமைப்பில் ஒரு சிவன் ஆலயம் இருந்திருக்கின்றது. இப்போதும் அதன் சொத்துகள் விரிந்துகிடக்கின்றது. அதன் பின்னர் இந்தியாவில் பிறந்த புத்தபெருமானின் போதனைகளை பின்பற்றிய ஒருவர் இங்கு வந்து பரப்பிய பௌத்தமதம் தான் இலங்கையில் இன்று விரிவடைந்து வலுவடைந்திருக்கின்றது.
அதேபோல் 1500 காலப்பகுதியிலே வந்த ஒல்லாந்தர் நாங்கள் சமாதானத்திற்காக பயணிக்கின்றோம் என்றுகூறிக்கொண்டு ஒருகையில் துப்பாக்கியோடும் மறுகையில் பைபிளோடும் கொண்டுவரப்பட்ட ஒரு மதம் இன்று மட்டக்களப்பில் விரிவடைந்து இந்துமதத்தையும் அரித்துக்கொண்டிருக்கின்ற ஒன்றாக மாறியிருக்கின்றது.
இது எங்களுடைய கட்டுப்பாடு ரீதியான கல்வி ரீதியான பலவீனமாகும். குருக்களுடையதும் ஆலயங்களுடையதுமான பலவீனமாகும். ஒழுங்கானதொரு செயற்திட்டத்தை உருவாக்காததன் காரணமாக ஏற்பட்ட பலவீனமாகும்.
நாங்கள் கிழக்கு மாகாணத்தில் இந்து குருமார்களின் பாடசாலைக்கான ஒரு அமைப்பை உருவாக்கிவிட முடியும். வருடந்தோறும் அதற்கான நிதியை ஒதுக்க முடியும். அதற்கான அதிபரை நியமிக்க முடியும். ஒரு சபையை உருவாக்க முடியும். ஆனால் இன்றிருக்கும் சூழ்நிலையில் கிழக்கு கிழக்கு மாகாணசபையில் அதனை செய்யமுடியாது. அரபுக்கல்விக்கான அங்கீகாரத்தை தான் நீங்கள் இன்று பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருக்கும்.வேறு எதனையும் செய்யமுடியாது.
கிறிஸ்தவ மதத்திற்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கின்றது. இன்று எங்கள் நாட்டில் கிறிஸ்தவ போதகர்கள் தான் கருத்துகளையும் கூறிவருகின்றார்கள். ஆலய குருக்களின் கருத்துகள் பலமாக ஒலிப்பது கிடையாது. ஏனென்றால் ஒரு கட்டமைப்பு இல்லை.
அரபுக்கல்லூரிகளிலிருந்து வெளியேறுபவர்களுக்கெல்லாம் தொழில்வாய்ப்பை பெறுவதில் பிரச்சனைகள் இருக்கின்றது. பல முஸ்லிம் நாடுகள் இலவசமாக கல்வியினை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தொகையான பணத்தினை அவர்களுக்கு வழங்கியிருக்கின்றது. இஸ்லாம் மதத்தினை பரப்புவதற்கு அரபுநாடுகள் உதவி செய்கின்றது.
கிறிஸ்தவ மதத்தினை பரப்புவதற்கு பல நாடுகள் உதவி செய்கின்றது. இந்து மதத்தினை பரப்புவதற்கு இந்தியாவிலுள்ள சில அமைப்புகள் உதவி செய்கின்றது. ஆனால் அது அரசியல் ரீதியான உதவிகளல்ல.
எங்களுக்குள் ஒற்றுமை இல்லை. இதனால் நாங்கள் ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்கவில்லை. மதத்திற்குள் அரசியல் பிரச்சினைகள் கிடையாது. இருந்தாலும் அதிலும் ஒரு அரசியல் உடன்பாடு இல்லை. இதன் காரணமாகவே நாங்கள் மதரீதியாக இன்னும் பின்னடைந்து செல்கின்றோம். எங்கள் மதத்தை, பூசை முறைகளை எப்படி பரப்புவது குருமார்களை எப்படி கற்பிப்பது என்பது பற்றி நாங்கள் ஒரு புள்ளியிலிருந்து சிந்திக்க வேண்டும்.
இங்கு பொருளாதார ரீதியாக உயர்ந்த கோயில்கள் இருக்கின்றன. இறைவனுடைய அருட்பிரகாரம் பெரும் பொருளையும் வருமானத்தையும் பெறுகின்ற குருமார்கள் இருக்கின்றார்கள். ஆனால் எல்லா ஆலயங்களுடைய நிலைமையும் அவ்வாறில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்குப்பின் அவ்வாலயங்களுடைய நிலைமை கேள்விக்குறியாக இருக்கின்றது. இதுபோன்ற பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. அது எங்கள் கடமையாகும்.
எங்களுடைய முன்னோர்கள் இந்துத்துவத்தையுமு; இந்து மதத்தினையும் பரப்புவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள். அவர்களுடைய வாரிசுகளான நாங்களும் அப்பணியினை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நாங்கள் எல்லோரும் விரும்பிநிற்கின்ற மதம் சார்ந்தவற்றை அரச வளங்களினூடாக சட்டத்திற்கு அமைவானவகையில் பலப்படுத்துகின்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் இந்துமதத்தில் தோன்றியிருக்கின்ற பல பிரிவுகளுக்கும் சார்பு ரீதியான பிரச்சினைகளுக்கும் மத்தியில் எங்கள் மதம் தொடர்ந்தும் அடிபட்டுச்செல்லும் நிலையேற்படும். ஆகையால் இந்து மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இந்து தர்மத்தையும் காக்கவேண்டும்.
அதேபோல் எங்களுடைய மாவட்டத்திலே இருக்கின்ற பிரச்சினைகளையெல்லாம் நிவர்த்தி செய்யவேண்டுமானால் இங்கு வந்திருக்கின்ற இந்து மதத்தில் பக்தி கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கையெடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
No comments:
Post a Comment