Friday, May 9, 2014

தம்புள்ள பள்ளிவாசல் இடம் மாறுகிறது





(தினகரன்)



தம்புள்ளை பள்ளி வாசலை பாதுகாப்புமிக்க சூழலில் அமைப்பதற்கு மாநகர முதல்வரினால் வழங்கப்பட்ட ஆலோசனையை பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக மாத்தளை மாநகர முதல்வர். ஹில்மி கரீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் பள்ளி வாசலை மாற்று இடத்தில் அமைக்க நான்கு இடங்களில் காணிகளை வழங்குவதாகவும் இவற்றில் ஒரு காணியை பள்ளி வாசல் நிர்வாகம் தேர்ந்தெடுக்குமாறும் கேட்டுள்ள தம்புள்ளை மாநகர மேயர் பள்ளி வாசலை நிர்மாணிப் பதற்கான செலவுகளில் இயன்றளவு தன்னால் வழங்கப்படுமென உறுதியளித்ததாகவும் மாத்தளை மேயர் தெரிவித்துள்ளார்.



இந்த ஆலோசனையை வரவேற்றுள்ள பள்ளி வாசல் நிர்வாகம் வழங்கப்படவுள்ள காணிகளில் ஒன்றை விரைவில் தெரிவு செய்யவுள்ளது இவை தொடர்பாக மேலும் தெரியவரு வதாவது,



கடந்த 6ம் திகதி தம்புள்ளை நகரைச் சேர்ந்த ஒருசில பெளத்த பிக்குகளும் கடும் போக்குவாதிகள் சிலரும் தம்புள்ளை பள்ளிவாசல் வளாகத் திற்குள் அத்துமீறி நுழைந்து குறுக்கு பாதை ஒன்றை அமைக்க முற்பட்ட போது பள்ளிவாசல் நிர்வாக சபையினருக்கும் கடும்போக்கு வாதிகளுக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடன் பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் நீண்ட நேரம் மாத்தளை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார்.



ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கும் இது கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதியின் அவசர பணிப்பின் பேரில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஏகநாயக, தம்புள்ளை மாநகர முதல்வர் ஜாலியஓபாத மற்றும் முக்கிய பிரமுகர்கள் தம்புள்ள ஜும்ஆப்பள்ளி வாசல் நிர்வாக சபை மற்றும் அங்குள்ள முஸ்லிம் ஜுமாஅத் தாருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.



தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக விடப்படும் சவால்கள். கடும் போக்குடைய சிலரின் அதிரடி நடவடிக் கைகளால் முஸ்லிம்கள் பாதிக்கப் படுவதையும் இஸ்லாமியர்களின் மத நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படுவதையும் தம்புள்ளை மேயர் விரும்பவில்லை. எனவே தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்ஆப் பள்ளியை மாற்று இடம் ஒன்றில் நிர்மாணிக்க தம்புள்ளை நகரில் சூழல் பாதுகாப்பு மிக்க வசதியான நான்கு காணிகளை தம்புள்ளை மேயர் முன்வைத்தார்.



பொருத்தமான காணி ஒன்றை முஸ்லிம்கள் தெரிவு செய்வார்களேயானால் பள்ளி வாயலின் நிர்மாணப் பணிகளுக்கு தன்னால் உதவ முடியும் எனவும் தம்புள்ள மேயர் தெரிவித்திருந்தார். தம்புள்ள மாநகர முதல்வாதும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளினதும் கூற்றுக்கள் சிறந்த முடிவு என்பதை தம்புள்ளை முஸ்லிம்களுக்கு மாத்தளை மேயர் ஹில்மி கரிம் விளக்கமாக எடுத்துக் கூறினார். தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகமும் முஸ்லிம்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.



மக்களின் இந்த முடிவு உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஜனாதிபதியின் முடிவோடு எதிர்வரும் 12ம் திகதி மீண்டும் தம்புள்ளை முஸ்லிம்களை சந்தித்து மாற்றுக் காணியை தம்புள்ள முஸ்லிம்கள் இனங்காட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.




No comments:

Post a Comment