சிங்களவர்களை போல் முஸ்லிம் தரப்பிலும் வன்முறைகள் ஏற்பட முஸ்லிம்கள் பரப்பிய வதந்திகள் காரணமாக அமைந்தது என மேல் மாகாண அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமவின் தலைவர்களில் ஒருவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் பள்ளிகளுக்கு தீமூட்டப்பட்டுள்ளன. பலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின. முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் என்னை தொடர்புக் கொண்டு பேருவளையில் குழந்தைகள் உட்பட 11 முஸ்லிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறினார்.
இது பச்சை பொய், செவ்வாய் கிழமை அதிகாலையில் நான்கு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் கூறினர். இது பச்சை பொய். ஒருவர் தொலைபேசியில் கூறியதும் அதனை தேடிப்பார்க்காது அனைவரிடம் அந்த கதைகளை கூறுகின்றனர்.
அதேபோல் கடந்த காலம் முழுவதும் நாட்டில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மோதலை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வந்தனர்.
இலங்கையில் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. 14 வயதான சிங்கள சிறுவனுக்கு பாலியல் சேட்டை செய்வது வேறு எதற்கும் அல்ல சிங்களவர்களை தூண்டவே அவர்கள் அப்படி செய்தனர். சிங்கள பௌத்தர்களை தூண்டவே பொசன் பௌர்ணமி தினத்தில் பௌத்த பிக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பொதுபல சேனாவின் கூட்டம் முடிந்து அனைவரும் அமைதியாக கலைந்து செல்லும் போது கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்குதல் நடத்தி பௌத்தர்களின் ஆத்திரத்தை தூண்டினர்.
இந்த நோக்கத்திலேயே புலிகள் அன்று அரந்தலாவவில் பிக்குகளை கொலை செய்தனர். அந்த நோக்கத்திலேயே மஹாபோதி மீதும் தலதா மாளிகை மீதும் தாக்குதல் நடத்தினர்.
எனினும் இந்த சம்பவங்களால் பௌத்த சிங்கள மக்கள் ஆத்திரமடையவில்லை. அவர்கள் புலிகளின் நோக்கத்தை அறிந்திருந்தனர்.
யுத்தம் முடிந்து 5 வருடங்களில் எமது தந்திரங்கள் எமக்கு மறந்து போய்விட்டன.
நாம் இன்னும் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றோம். அன்று நாம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞான வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மோதினோம்.
தற்போது உலகின் வல்லரசான அமெரிக்காவுடன் நாம் இன்று மோதிக்கொண்டிருக்கிறோம்.
நாம் சர்வதேசத்தினால் சுற்றிவளைப்பட்டிருக்கின்றோம் என்பதை முழு நாட்டு மக்களும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment