Sunday, June 29, 2014

இனவாதத்தை கட்டவிழ்த்து, சிங்களபெளத்த வாக்குகளை மாத்திரம் பெற்று, மீண்டும் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி



தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டு சிங்கள பெளத்த மக்களது வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு மீண்டும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கே அரசாங்கம் முயன்று வருகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.



அரசாங்கத்தின் இந்த தேசப்பற்று என்ற போலி பேச்சுக்களை சம்பிக்க ரணவக்க மற்றும் விமல்வீரவன்ச போன்ற இனவாதிகள் வேண்டுமானால் நம்பலாம் ஆனால் சிங்கள பௌத்த மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் அந்தளவிற்கு அவர்கள் முட்டாள்கள் அல்லவெனவும் அவர் தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;



முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆகியும் நாட்டில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது போயுள்ளது. உண்மையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தை விடவும் தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது.



சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து நாடு படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கப்பலே வராத துறைமுகங்களும் விமானமே வராத விமான நிலையங்களும் மழைக்காலத்தில் கழுவிக்கொண்டு போகும் கார்பட் பாதைகளுமே அரசாங்கத்தால் காண்பிக்கக் கூடியதாக உள்ளது.



இந்த அரசாங்கத்தின் இவ்வாறான செயல்பாடுகளில் இருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு ஆட்சி மாற்றம் ஒன்றே வழி. அதனை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். எனவே, இன மத கட்சி பேதங்களையும் குறுகிய அரசியல் நோக்கங்களையும் மறந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.


No comments:

Post a Comment