புத்திசாலித்தனமான தலைவர்களுக்கே இனவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இனப்பற்று எனக் கூறிக்கொண்டவர்கள், அளுத்கம பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இருந்த பொருட்களை வெளியில் எடுத்தவர்கள், அவற்றை தமது வீடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இது சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள நோய்.
புத்திசாலிகளுக்கும், புத்திசாலித்தனமான தலைவர்களுக்குமே இந்த நோயை சமூகத்தில் இருந்து குணப்படுத்த முடியும்.
சிலர் தமது தனிப்பட்ட நோக்கங்களை இனவாத பிரச்சினையாக்க முயற்சித்து வருகின்றனர். அந்த சேனா, இந்த சேனா என்று பல பக்கங்களில் இருந்து சேனை உருவாகி வருகின்றன. கடந்த காலங்களில் இந்த சேனாக்கள் எதுவும் இருக்கவில்லை. சேனாக்கள் இணைந்து நாட்டை பிளவுப்படுத்த முயற்சித்து வருகின்றன.
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற அழிவுகளால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கம் இந்த அழிவுகளை சீர்செய்து கொடுக்கும். சிலரது புத்திசாலித்தனமற்ற செயல்களால் இந்த அழிவு ஏற்பட்டது. 52 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்கு கூட எவருமில்லை.
பேருவளை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொசன் தோரணத்தை கூட காட்சிப்படுத்த முடியாது போனது. சிலர் நன்றாக சாப்பிட்டு, ஆடைகளை அணிந்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பவர்கள் தாமும் அப்படி இருக்க முயற்சிப்பதில்லை. பொறாமைப்படுகின்றனர்.
புத்த பகவான் வாழ்ந்த காலத்திலும் இப்படியான அழிவுகளை ஏற்படுத்தும் நபர்கள் இருந்தனர். நாம் சிலவற்றை புதிதாக நிர்மாணிக்கும் போது சிலர் அவற்றை உடைத்து போடுகின்றனர்.
கடைகளை உடைத்து அவற்றை வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர் எனவும் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment